நேர்காணல்கள்

‘சஜித் வந்தாலும் தமிழர்களை ஏமாற்றவே முயற்சிப்பார்’

“ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென இந்த நாட்டை ஆட்சிசெய்த இரண்டு பிரதான கட்சிகளும் மலையகத் தமிழர்களை ஏமாற்றியதே வரலாறு.

வாக்களிப்பு இயந்திரமாகவே அம்மக்களை இன்னும் பயன்படுத்துகின்றன. இதற்கு மலையக அரசியல் தலைவர்களும் துணை நிற்கின்றனர். இதன்காரணமாகவே அற்ப சம்பளத்துக்காகவும் போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.”

-இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஊடகன் வார இதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“இற்றைக்கு 20 சதாப்தங்களுக்கு முன்னர் கோப்பி, தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து மலையகத் தமிழர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு எவ்வித வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. கொட்டில்களிலேயே குடியமர்த்தப்பட்டனர்.

வெள்ளையர் ஆட்சிகாலத்தில் அவர்கள் அடக்கி ஆளப்பட்டனர். அதன்பின்னர்கூட அவர்களுக்கு விடிவு பிறக்கவில்லை.  குடியுரிமை பறிக்கப்பட்டது. பாதிபேர் இந்தியாவுக்கு அனுப்பட்டனர். குடியுரிமை, வாக்குரிமை, வீட்டுரிமை ஆகியன பல வருடங்களாக வழங்கப்படவில்லை.

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன மலையகத் தமிழர்களுக்கு துரோகங்களையே இழைத்தன. குடியுரிமை வழங்கப்பட்ட பின்னர் அரசியலுக்கு வந்த மலையக மக்களின் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தாமல் சொந்த அரசியலுக்கே முக்கியத்துவம் வழங்கினர்.( ஒரு சிலரை தவிர.)

‘இதன்காரணமாக மலையக மக்களுக்கு உரிமைகள் கிடைக்கவில்லை. எனவே,  சமூகமாற்றத்துக்கான முழுப்பொறுப்பையும் மலையக அரசியல் வாதிகள் இதய சுத்தியுடன் பொறுப்பேற்க வேண்டும்.

மலையக அரசியல்வாதிகள் மத்திய அரசாங்கத்தில் பல தடவைகள் அமைச்சுப் பதவிகளை வகித்தனர். ஆனால், தமது சமூகத்தின் விடிவுக்காக என்ன செய்தனர்? நிலவுரிமைகூட இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. சம்பளத்தைக்கூட போராடி பெறவேண்டிய நிலையே நீடிக்கின்றது. இதுதான் மாற்றமா?

மலையக அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை. தொழிற்சங்க ரீதியில் மோதிக்கொள்கின்றனர். சமூக முன்னேற்ற தடைக்கு இதுவும் ஓர் காரணமாக அமைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்

அதேவேளை, விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. வடக்கு, கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளைத்தான் வேட்பாளர்கள் வழங்கப்போகின்றனர்.

சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச, கருஜயசூரிய, சிராந்தி ராஜபக்ச என யார் வந்தாலும் தமிழ் மக்களை ஏமாற்றவே முயற்சிப்பார்கள். எனவே, இம்முறை விழிப்பாகவே இருக்கவேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான களத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அதை மையப்படுத்தியதாகவே தமிழ்க் கட்சிகளின் தீர்மானங்கள் அமையவேண்டும்.” என்றார்.

கருத்து தெரிவிக்க