உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘இலங்கை – கம்போடிய நாடுகளுக்கிடையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து’

இலங்கை – கம்போடிய அரசாங்கத்துக்கும் இடையிலான அரசியல் மற்றும் வர்த்தகத் துறையுடன் தொடர்புடைய இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கம்போடியா நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கம்போடிய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் போதே குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.

இரு நாடுகளுக்கிடையிலான நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் எதிர்காலத்தில் சிவில் விமான சேவைகள் தொடர்பிலான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நீண்டகாலமாக இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு நீடித்தாலும் இதுவரையில் இரு நாடுகளிலும் தூதுவராலயங்கள் ஸ்தாபிக்கப்படாமையை கருத்திற்கொண்டு அவற்றை துரிதமாக அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தை வாய்ப்புக்கள் மற்றும் நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் முதலீட்டு பாதுகாப்புக்காக சட்டபூர்வமான அடித்தளம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன காம்போடிய பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

அதிகளவிலான கம்போடியா நாட்டின் பிக்குகள் இலங்கையில் கல்வி கற்று வருவதுடன் அவர்களுக்கு இலங்கையில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளுக்காக ஜனாதிபதிக்கு கம்போடிய பிரதமர் நன்றி தெரிவித்தார்.

மேலும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்போடிய பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

தலைவர்களினது சந்திப்பை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையிலான புதிய இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க