மலையகத்தின் கல்விக்கான வசதிகள் சிறப்பாக உள்ளதாக பலரும் கூறுகிறார்கள்.
ஆனால், சில பாடசாலைகளில் இது மீண்டும் 1970ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கு சென்று விட்டது என்று கூறினால் நிச்சயமாக பலரும் கோப்படுவார்கள். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இந்தநிலையில், “ஊடகன்” செய்தித்தாள் எல்லோரின் கவனத்துக்காகவும் பிரசுரிக்கும் உண்மைக்கதை இது.
நுவரெலியாவின் நானுஓயா நகரத்தில் இருந்து 9 கிலோமீற்றர் தூரத்தில் ஆறு, தொடரூந்துக்கடவை மற்றும் தேயிலை மலைகளை கடந்து செல்லவேண்டிய பெருந்தோட்டமே உடதரல்ல.
மலையடிவாரத்தில் அமைந்துள்ள அழகான ஊர்.
1500பேர் வரை வசிக்கும் தோட்டத்தில் மேல்பிரிவு, கீழ்ப்பிரிவு என்று இரண்டு நிர்வாகப்பிரிவுகள் உள்ளன.
இங்கு 1902ஆம் ஆண்டு உரக்களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு கட்டிமே இன்று உடரதல்ல தமிழ் வித்தியாலயமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் கற்பிக்கப்படும் இந்தப்பாடசாலையில் அதிபருடன் சேர்த்து 6 ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுகின்றனர். ஆங்கில ஆசிரியருக்கு மாத்திரம் வெற்றிடம் உள்ளது.
பிறகென்ன பெரும்பாலும் எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது. பின்னர் ஏன் ஆரம்பக் காலத்துக்கு இந்த பாடசாலை சென்று விட்டது என்று கூறுகிறீர்கள்? என்று கேலியாக கேட்பது புரிகிறது.
இது கேலி அல்ல உண்மை. பெருந்தோட்ட பாடசாலைகள் அரச பாடசாலைகளாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னர் இரண்டு வேளை பாடசாலைகளாக இயங்கி வந்தன. உரிய கட்டிட வசதி, உரிய ஆசிரியர்கள் இல்லாமை என்பன இதற்கு காரணங்களாக இருந்தன.
எனினும் இலங்கையில் கல்விக்கான வசதிகள் பாரியளவு செய்துக்கொடுக்கப்படுகின்ற நிலையில் இந்தப்பாடசாலைக்கு ஒரேயொரு கட்டிடமே உள்ளது.
இதில் மொத்தமுள்ள 140 மாணவ மாணவிகளையும் ஒரே தடவையில் வைத்து கற்பிக்கமுடியாது என்பதற்காகவே பாடசாலை நிர்வாகம், இந்த மாணவர்களுக்கு இரண்டு வேளைகளி;ல் கற்பித்தலை மேற்கொண்டு வருகிறது.
முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மற்றும் 5ஆம் வகுப்புக்கு காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரை வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
மூன்றாம் வகுப்புக்கும் 4ஆம் வகுப்புக்கும் முற்பகல் 11 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
இங்கு இரண்டு மனித உரிமைமீறல்கள் இடம்பெறுகின்றன.
சிறுவயதில் மாலை வேளையில் விளையாட்டுக்களில் ஈடுபடவேண்டிய 3ஆம் 4ஆம் வகுப்பு மாணவர்கள் அந்த நேரத்தில் பாடசாலைக்கு வர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அதேநேரத்தில் காலையில் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் மாலை வரை பாடசாலையில் இருந்து கற்பிக்கவேண்டியவர்களாக உள்ளனர்.
இந்த நேரத்தில் உடரதல்ல தமிழ் வித்தியாலய அதிபர் ஆசிரியர்களின் சேவைக்காக நிறைந்த பாராட்டுக்களை தெரிவிக்கவேண்டும்.
இந்த ஆசிரிய ஆசிரியைகளில் பெரும்பாலானோர் 9 கிலோமீற்றர் தூரம் நடந்தே பாடசாலைக்கு சென்று திரும்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.
இந்தப்பாடசாலை நிர்வாகத்துக்;கு மாணவர்களின் பெற்றோர் பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
இதனடிப்படையில் அவர்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு இணைக்கட்டிடமும் அண்மையில் உடைந்துபோனது.
இந்தநிலையில் பாடசாலைக்கு கட்டிடத்தை அமைக்க போதுமான காணி உள்ளது.
இந்தக்காணியில் கட்டிடம் ஒன்றை கட்டித்ததருமாறு பாடசாலை நிர்வாகம் அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம்; பல கோரிக்கைகளை விடுத்துள்ளது.
இறுதியாக கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும் சொல்லப்பட்டு விட்டது.
எனினும் அடுத்தக்கட்டத்துக்கு இந்தப்பிரச்சினையை நகர்த்தியிருக்கிறோம் என்பதே அனைவரின் பதிலாக அமைந்துள்ளது.
இந்த அடுத்தக்கட்டத்துக்கான அர்த்தம் இன்னும் உடரதல்ல மக்களுக்கு புரியவில்லை.
தமது பிள்ளைகளின் கல்விக்கு ஏன் இவ்வாறு பின்னடிப்பு செய்யப்படுகிறது? என்று அவர்கள் அங்கலாய்க்;கின்றனர்.
5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களி;ன் பெற்றோர் இந்த அங்கலாய்ப்பை வெளியிட 5ஆம் வகுப்புக்கு பின்னர் ஆறாம் ஆண்டு முதல் உயர்தரம் வரை கற்கும் சுமார் 100 மாணவர்கள் 9 கிலோமீற்றர்கள் நடந்து, நானுஓயா மற்றும் ரதல்ல பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.
எனினும் இதில் ஆண்டுதோறும் பல மாணவர்கள் இடைவிலகல்;களுக்கு தள்ளப்படுகின்றனர்.
இதற்கு உரிய செயற்திட்டங்கள், ஊக்குவிப்புக்கள் இல்லாமையே காரணமாக உள்ளன.
எனவே இந்த மாணவர்களின் கல்வியை தொடர்வதற்கும் உடரதல்ல தமிழ் வித்தியாலயத்தின் 5ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வியை சீர்படுத்துவதற்கும் ஒரே வழி கட்டிடம் ஒன்றை அமைத்துக்கொடுப்பதே ஆகும்.
90 நீளம் 25 அகலம் கொண்ட 3 மாடி கட்டிடம் ஒன்று ஆசிரியர் விடுதிகளுடன் அமைக்கப்படுமானால், உடரதல்ல தமிழ் வித்தியாலயம் பிரதேசத்தில் முதலாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்கக்கூடிய ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்பதே உடரதல்ல பெருந்தோட்ட மக்களின் பெருவிருப்பமாக உள்ளது.
அவ்வாறு இது சாதாரணத்தரம் வரையிலான பாடசாலையாக மாற்றப்படுமானால், உடரதல்ல தோட்டத்தின் இரண்டு பிரிவுகளிலும் உள்ள சுமார் 400 மாணவர்களுக்கு இந்தப்பாடசாலை அர்ப்பணிப்பான ஆசிரியர்களின் உதவியுடன் சிறப்பான கல்வியை பெற்றுக்கொடுக்கமுடியும்.
தமது இந்த விருப்பம் இன்னும் எத்தனை நாட்களுக்கு விருப்பமாக மாத்திரமே இருக்கும் என்பதை ஊகித்துக் கூறமுடியவில்லை என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
கருத்து தெரிவிக்க