உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ரணில் மீது நம்பிக்கை இல்லை -அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம்

ரணில் விக்கிரமசிங்கவின் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை அரசிடம் பெற்று அபிவிருத்தியை நாம் மேற்கொள்வோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட பார்வையாளர் கூடத்தினை திறந்து வைத்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் தமிழர்களிற்கான தீர்வானது இன்னும் மூன்று வருடத்தின் பின்னரே கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள், வன்னி பாரளுமன்ற உறுபபினர் சி.சிவமோகனிடம் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1948ம் ஆண்டில் இருந்து எத்தனையோ அரசியல் தலைவர்கள் இதே வசனத்தை பேசியிருக்கிறார்கள்.

இதேவேளை ரணில்விக்கிரமசிங்க என்ன நோக்கத்தில் அவ்வாறு கூறினர் என்று எனக்கு தெரியாது.

என்னைப்பொறுத்த வரையில் தமிழர்களிற்கான தீர்வு கிடைத்திருக்க வேண்டுமாயின் 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தாங்களாகவே தங்களது ஆயுதங்களை மௌனித்த பின் தமிழர்களிற்கான ஒரு தீர்வை நோக்கி சிங்கள தேசம் சென்றிருக்க வேண்டும். அதிலிருந்து முற்றுமுழுதாக மகிந்த ராஜபக்ச விலகிவிட்டார்.

அதன் பின்னர் வந்த மைத்திரிபால சிறிசேனவும் தமிழர்களின் வாக்குகளில் ஜனாதிபதி ஆனவர். அவரும் கொடுத்த வாக்கில் இருந்து முற்று முழுதாக விலகிவிட்டார்.

எனவே அந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவின் வார்த்தைகள் கூட நம்பிக்கைக்குரியவை அல்ல. எங்களை பொறுத்தவரை பேயா பிசாசா என்ற தீர்மானமே எங்களிடம் இருந்தது.

எனவே ஒரு பிசாசு வரக்கூடாது என்றால் ஒரு பேயை ஆதரிக்க வேண்டிய தேவை இருந்ததால் இந்த அரசை ஆதரித்திருக்கிறோம்.

எமது தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை அவிழ்த்துவிட்டதுடன் எமது மக்களையும் சரணடைந்தவர்களையும் படுகொலை செய்தனர்.

இதற்கு காரணமாக இருந்தவர்கள் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதற்காக இன்னும் பல விடயங்களையும் இவ்வாறு செய்வோம்.

மேலும், இது மக்களிற்கான பணம் எமது வரிப்பணம் நாங்கள் எடுப்போம் அதை மக்களிற்காக செலவளிப்போம் என தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க