ஜோதிடம்

சனி தர்மம் -11

தமிழகத்திலிருந்து குணா

பிறருக்கு ஏற்படும் பசியெனும் நெருப்பை அன்னமிட்டு அணைத்தால், அஷ்டம சனியெனும் அரக்கனையும் தேவனாக்க முடியுமென்பதை கடந்த இதழில் பார்த்தோம்.

இப்போது ‘தர்மகர்மாதிபதி’ இடங்களுக்கு சனிவரும்போது, என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த இதழில் பார்ப்போம்.

அதென்ன ‘தர்ம கர்மம்’ என்று திகைக்காதீர்கள். 1 முதல் 12 நிமிடங்கள் வரையிலான கட்டங்களில் உள்ள 9 மற்றும் 10 மிடங்களையே ‘தர்ம கர்மம்’ என்று  ஜோதிடம் அழைக்கிறது!

தர்மம் + கர்மம்= தர்மகர்மம்! தர்மம் என்பது தானதர்மத்தை மட்டுமே குறிப்பதல்ல.ஒருவரின் பரம்பரை வழியையும், அதன்பால் ஏற்படும் குணம், பண்பு, ஒழுக்கம் என்ற அனைத்தையுமே இது குறிக்கிறது!  அந்த தர்மத்துக்குரிய இடம் 9ஆகும். முந்தைய இதழ்களில் திரிகோண கேந்திரம் பற்றி பார்த்திருக்கிறோம். 1, 5, 9 மிடங்களே திரிகோண கேந்திரம்  என்பதாகும்.

இந்த முக்கோணத்தை 9,1,5 என்றெ வரிசைப்படுத்த வேண்டும்! 9- தகப்பன், 1- நாம், 5-நமக்கு பிறக்கும் பிள்ளை! ஒருவரது பரம்பரை வைத்து அவரது
குணம், பண்பு, ஒழுக்கங்கள் என்ற தர்மத்தைக்கொண்டே அவர் எப்படிப்பட்டவர் என்று கணித்துவிடலாம்!

விதை ஒன்று விதைத்தால் செடி ஒன்றா முளைக்கும்! ஒருவன் தன் பரம்பரை தர்மத்தை தழைக்கச் செய்வானா அல்லது தன் பரம்பரையை
பழிச்சொல்லுக்கு ஆளாக்குவானா என்பதெல்லாம் 9- மிடத்தை வைத்தே கணிக்கப்படும்!

‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ , ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே’ என்ற பழமொழிகள் பிறந்ததெல்லாம் பரம்பரையின் முக்கியத்துவத்தை உணர்த் தத்தான்! ஆகவேதான் 9-மிடத்தை ஜோதிடம் ‘தர்மம்’ என்று சிறப்பித்து கூறுகிறது!

தர்மம் சரி! கர்மமென்றால் என்ன? ‘கர்மம்’ என்ற வார்த்தையின் பொருள் செயல் என்பதாகும். ஒருவர் என்ன செயல்கள் செய்து, அதாவது என்ன தொழில்  செய்கிறார் என்பதை பொறுத்தே உலகம் அவரை எடை போடுகிறது! எல்லா தொழில்களுமே சிறப்புடையவை.. என்றாலும் அன்றாட வாழ்வில் அதற்குரிய ஏற்ற தாழ்வான மதிப்பீடுகளை எவரும் மறுக்கவே முடியாது!

கட்டண கழிப்பிடத்தை குத்தகைக்கு எடுத்து பணக்காரனான ஒருவனுக்கு கிடைக்கும் சிறப்பைவிட, மிக குறைந்த ஊதியத்தில் ஒன்றாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் ஆசிரியனுக்கு கிடைக்கும் மிகுந்த மரியாதையே நாம் சமூகத்தில் பார்க்கின்றோம்.! அதற்காக கழிப்பிட பராமரிப்பு தொழிலை நாம் குறைத்து எடைபோட முடியாது! அவர்கள் இல்லையெனில் நாம் நாறிப்போவோம்! ஆனாலும்  சமுதாயத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை புறந்தள்ளிவிட்டு இந்த ஆராய்ச்சியை செய்வதென்பதும் உண்மைகக்கு மாறானதாக அமைந்துவிடும்!

ஆக ‘கர்மம்’ என்ற தொழிலமைப்பை வைத்துத்தான் ஒரு பரம்பரையை இந்த சமூகம் அடையாளப்படுத்துகிறது. அந்த கர்மஸ்தானமே அதாவது தொழில்
ஸ்தானமே 10-மிடமாகும்!

அதனால்தான் 9+10, அதாவது தர்மம் + கர்மம் இரண்டையும் சேர்த்து ‘தர்மகர்மம்’ என்றழைக்கிறது நமது ஜோதிடம். இந்த இடங்கள் எந்த கிரகங்களுக்கு உரியதோ. அவைகளே தர்ம கர்மாதிபதிகள் என்று அழைக்கப்பட்டன. இப்படியான தர்ம, கர்ம இடங்களுக்கு சனிபகவான் வருவது எத்தனை முக்கியமானது  என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்! ஏனெனில் சனி தர்மநெறி பிறழாத கடுமையான நீதிமான்!

அப்படிப்பட்ட நீதிமானிடம் கருணையை நாம் பெற முடியும், அதே சமயத்தில் கடுமையான தண்டனைகளையும் எதிர் கொண்டே ஆகவேண்டும். நம் தவறான செயல்களுக்கு!  திரைப்பட மொழியில் சொல்ல வேண்டுமானால் , ‘சனி நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன்!

ஒரு பரம்பரைக்கு ஆணிவேரான 9-மிடத்துக்கு சனி பகவான் வரும் அந்த பரம்பரையை செழிக்கச்செய்யும் நன்னீராக விளங்கப்போகிறாரா அல்லது வெந்நீர் ஊற்றி பரம்பரைக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தப்போகிறாரா என்பதெல்லாம் அந்த 9-மிடத்து தன்மையையும், சனியின் மேல் விழும். சுபர், அசுபர் பார்வைகளையும் பொறுத்ததே!

இந்த ஜோதிட விதிகளின்படி நல்லதான கெட்டதான விஷயங்கள் சனியினால் ஏற்படுவது ஒரு புறமிருந்தாலும், 9மிட சனியென்றால் ஜோதிடர்கள் சற்று எச்சரிக்கையுடனேயே பலன்களை கூறுகிறார்கள்! ஏன் அப்படி?

ஏனென்றால், 9மிடம் தகப்பனைக் குறிக்கும் இடம். ஆனால் சனியோ ‘ தகப்பனுக்கு ஆகாத பிள்ளை’ என்று புராணங்கள் விவரிக்கின்றன.!
‘சிறு வயதிலேயே தந்தையால் வெறுக்கப்பட்டவரே சனி! என்றும் விளக்குகின்றன.

அதனால்தான் ‘பிதுர் கோஷம்’ அதாவது தந்தை வழி தோஷம் உருவாக சனி பகவானே தலையாய காரணமாக அமைகிறார் என்றும் ஜோதிட நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.

இக்காரணமாகவே பலயீனமான ஒன்பதாமிட சனி அமைப்பில் உள்ளவருக்கோ அல்லது 9-மிடம் சனி பார்வையால் பாதிக்கப்பட்டவருக்கோ எளிதில்  தந்தையால் ஏற்படும் சுகங்களும், அனுகூலங்களும் கிட்டுவதே இல்லையென்றால் அது மிகையல்ல! ஏன் இப்படி திகழ்கிறது என்பதையும், தந்தைக்கு ஆகாத ‘சனி தர்மம்’ பற்றியும் அடுத்த இதழில் பார்ப்போம்.

கருத்து தெரிவிக்க