விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் தகவல் வெளியீட்டாளர் செல்சியா மனிங்கையும் விடுவிக்கும் உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) ஆகியன இணைந்து கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணம், தலைநகரான கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டனிலும் நடைபெற உள்ளது.
‘அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள அசான்ஜ், அவர் தஞ்சம் கோரியிருந்த லண்டனில் உள்ள ஈக்வோடர் தூதரகத்திலிருந்து பிணை நிபந்தனைகளை மீறியதாக போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
உளவு பார்த்த குற்றச்சாட்டில் அவர் இப்போது அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் அச்சுறுத்தலையும், அவரை 170 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் முயற்சிக்கிறது.
அசாஞ்சிற்கு எதிராக சாட்சியமளிக்க தைரியமாக மறுத்ததற்காக மானிங் காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உலக சோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு ஜூன் 20 அன்று அசான்ஜ் மற்றும் மனிங்கின் சுதந்திரத்தை பாதுகாக்க உலகளாவிய பாதுகாப்புக் குழு ஒன்றை அமைக்க ஒரு சக்திவாய்ந்த அழைப்பை வெளியிட்டது.
இந்த அழைப்பின் அடிப்படையில் ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கு, உலகம் பூராகவும் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து, இலங்கையில் சோ.ச.க. பிரச்சாரம் செய்கிறது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதன் மூலம் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அசான்ஜ் மகத்தான சேவையை வழங்கியுள்ளார்.
எனவே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கப் படுகின்றது.
இதன்படி ஜூலை 10 மாலை 4 மணிக்கு,யாழ் பிரதான பஸ் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதோடு ஜூலை 17 மாலை 4 மணிக்கு கொழும்பின் பொது நூலக கேட்போர் கூடத்தில் பொதுக் கூட்டம் இடம்பெற உள்ளது.
அத்துடன் ஓகஸ்ட் 11 ஹட்டனில் காலை 11 மணிக்கு, பிரதான பஸ் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டமும் பின்னர் பிற்பகல் 2 மணிக்கு தொழிலாளர் பொழில் மண்டபத்தில் பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது’ என குறித்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க