புங்குடுதீவு மாணவி படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாரை விடுவிக்க உதவிய முன்னாள் உதவி பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சுவிஸ் குமார் என்பவரை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாவது சந்தேகநபரான லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையான நிலையில், இரண்டாவது சந்தேகநபரான சிறிகஜன் மன்றில் முன்னிலையாகவில்லை.
இதையடுத்து, இரண்டாவது சந்தேக நபர் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அத்துடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அறிவித்தார்.
கருத்து தெரிவிக்க