வவுனியா பூவரசன்குளம் சந்தியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தரும்படி கோரி இன்று காலை ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வந்துள்ளனர்.
பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதி பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாத காரணத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல போராட்டங்களை மேற்கொண்டும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை காலமும் எடுக்கப்படவில்லை என தட்டான்குளம் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.
சண்முகபுரம், வாரிக்குட்டியூர், கங்கன்குளம், மணியர்குளம், செட்டிகுளம், பூவரசங்குளம் ஆகிய ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழியேற்படுத்திக் கொடு, எமது பிரதேசத்திலுள்ள நோய்வாய்ப்பட்டவர்களை மரணப் பொறியில் தள்ளாதே, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்ட இடத்திற்குச் சென்ற வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் ஆர்.எச். உபாலி சமரசிங்கவிடமும், பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடமும் தமது மகஜரினைக் கையளித்து போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதி வீதியூடான போக்குவரத்து சற்றுத் தடைப்பட்டதுடன் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
கருத்து தெரிவிக்க