உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

பிரித்தானிய தூதுவர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் நேற்று காலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டவுறிஸ்,பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் டேவிட் அஸ்மன், அரசியல் பிரிவுக்கான அதிகாரி ஜோவிதா அருளானந்தம் ஆகியோர் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்களான வே.தவராஜா,சிவம் பாக்கியநாதன்,இராஜேந்திரன்,ஜெயா மற்றும் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் ஆகியோர் வரவேற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பிரித்தானிய தூதுவர் முதல் முறையாக மட்டக்களப்புக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் குறித்து அவர் கேட்டறிந்துகொண்டார்.

குறித்த தாக்குதலின் பின்னர் இனங்களிடையே காணப்படும் முரண்பாடுகள் தொடர்பிலும் அவற்றினை நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தூதுவர் கலந்துரையாடினார்.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னெடுப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துகொண்ட தூதுவர் பிரித்தானியாவில் இருந்து மட்டக்களப்புக்கு முதலீட்டாளர்களை இணைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக இங்கு உறுதியளித்தார்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தூதுவரின் கவனத்திற்கு மாநகரசபை உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்டது.

அத்துடன் இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான சூழலை சர்வதேசத்தினால் மட்டுமே ஏற்படுத்திக்கொடுக்கமுடியும் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க