உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தெரிவுக்குழுவில் ஆஜராக தயாசிறி நிபந்தனை!

” சபாநாயகர் கரு ஜயசூரிய தனது நிலைப்பாட்டை  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாராயின், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” தெரிவுக்குழு விசாரணையின்மூலம் வெளியாகும் தகவல்களானவை நீதிமன்ற விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சட்டமா அதிபரால், ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்விவகாரம் குறித்து சபாநாயகருக்கு, ஜனாதிபதி செயலாளரால் கடிதமொன்று அனுப்பட்டுள்ளது. அந்த கடிதம் இன்னும் சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

ஜனாதிபதியால் விடுக்கப்படும் அறிவிப்பு சபையில் சமர்ப்பிக்கப்படுவது வழமையான நடவடிக்கையாகும். எனவே, குறித்த கடிதத்தை சபையில் சமர்ப்பித்து  தனது நிலைப்பாட்டை – தீர்மானத்தை சபாநாயகர் அறிவிப்பாரானால், தெரிவுக்குழுவில் நாளை வேண்டுமானாலும் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு நான் தயார்.

நீதிமன்ற விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடக்கூடாது.  அந்த நடைமுறையையே நான் பின்பற்றியுள்ளேன்.

எனினும், நீதிமன்ற நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சபாநாயகர் அறிவித்தால், தெரிவுக்குழுவில் முன்னிலையாகி முக்கிய பல விடயங்களை தெரியப்படுத்துவதற்கு தயார் நிலையிலேயே இருக்கின்றேன்.” என்றார் தயாசிறி ஜயசேகர.

கருத்து தெரிவிக்க