இரத்மலானை கொழும்பு இந்துக்கல்லூரி பெற்றோரும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை 7.30முதல் முற்பகல் 9.30 வரை நடத்தப்படவுள்ளது.
பாடசாலை அதிபருக்கு எதிராக வெளியார் சிலர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் “ஊடகனி”டம் தெரிவித்தனர்.
தற்போது பணியில் உள்ள அதிபர் இந்தப் பாடசாலையை பொறுப்பேற்றபோது 300 மாணவர்கள் கல்வி கற்றனர்.
தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது.
இதில் அதிகமானோர் மலையகப் பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களாவர்.
கல்விப்பொதுத்தராதர உயர்தர கற்கை நெறிகள் அனைத்துமே இந்த கற்பிக்கப்படுகின்றன.
அத்துடன் மேல் மாகாணத்தில் ஒரேயொரு தமிழ்மொழி விளையாட்டுப் பாடசாலையாகவும் இது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாடசாலையின் அதிபர் கல்லூரி விடுதி செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில் ஆசிரியர் சங்கத்தின் ஊடாக மனு ஒன்று ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகள் எதுவுமின்றி அதிபரை, களுத்துறை வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் செய்வதை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பெற்றோர் கூறுகின்றனர்.
எனவே அதிபர் தொடர்ந்தும் பாடசாலை சேவையில் இணைக்கப்படவேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் அதிபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விடுதியில் இருந்து கற்கும் மாணவர்களும் விடுதிக்காப்பாளரும் நிராகரித்துள்ளனர்.
இந்தப்பாடசாலையின் காணிகளை கையகப்படுத்திய முனைவோரை அதிபர் எதிர்த்தமை, பிரதி அதிபரை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் ஆசிரியர் ஒருவரை பாடசாலையில் இருந்து நீக்கியமை பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்; ஒருவர் பொருத்தமற்ற செயற்பாடு காரணமாக மேல்மாகாண கல்விப்பணியாளரால் நீக்கப்பட்டமை, மைதானத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்த முனைந்த பழைய மாணவர் ஒருவருடன் அதிபர் முரண்பட்டமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே தற்போது அதிபருக்கு எதிரான இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோர் “ஊடகனி”டம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க