கட்டுரைகள்

மலையகத் தமிழரின் வரலாறும் அரசியலும் (2)

கோப்பி அறுவடைக்காக பெண் தொழிலாளர்கள் தேவைப்பட்டதால் கங்காணிகளுக்கு விசுவாசமாக இருந்த தொழிலாளர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து தொழில் செய்து ஊர் திரும்புவதற்கு விருப்பமுள்ள தொழிலாளர்கள் தங்களது மனைவிமார்களை அழைத்து வந்தார்கள். ஆள்காட்டிகள் (ஏஜன்டுகள்) மூலமாகவும் பெண் தொழிலாளிகள் அழைத்து வரப்பட்டார்கள்.

அவ்வாறு இலங்கை கோப்பித் தோட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட பெண் தொழிலாளர்கள் போலவே, பிஜித் தீவுகளின் கரும்புத் தோட்டங்களுக்கும் பெண் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்வாறு பெண் தொழிலாளர்கள், கோப்பி கரும்புத் தோட்டங்களுக்குச் சென்ற பிறகு புதிய பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின.

அவை பயங்கரமான பிரச்சினைகளாக உருவெடுத்தன. அந்தப் பிரச்சினைகள் தொழில்சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாக அல்லாமல், தனிப்பட்ட பிரச்சினைகளாகத் தோன்றின. அவை மனிதத் தூஷணையாகவிருந்தன. பெண்களுக்கான பாலியல் தூஷணையாகவிருந்தன.

ஒப்பந்தக் கூலிகளாக தோட்டங்களுக்கு வந்துவிட்ட பெண்கள் தொழில் ரீதியாக கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதோடு பாலியல் தொல்லைகளால் படு பயங்கரமாகத் தாக்கப்பட்டார்கள். அக்காலங்களில் 100 ஆண்களுக்கு 20 பெண்கள் வீதமாகவே இருந்தார்கள்.

மனைவி பிள்ளைகளை சொந்த கிராமங்களில் விட்டு வந்த ஆண் தொழிலாளிகளும் திருமணமாகாத ஆண் தொழிலாளர்களும் தொழிலுக்கு வந்த பெண்களிடம் பாலியல் தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினார்கள்.

தொழிலாளிகள் முதல் கங்காணி ஏனைய அதிகாரிகள் சில சந்தர்ப்பங்களில் தோட்ட உரிமையாளர்கள் என்று பெண்களை நாசம் செய்யத் தொடங்கினார்கள். தொழிலை எதிர்பார்த்து வந்த பெண்கள் ஆண்களின் பலாத்காரங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலியாகினார்கள். பலர் கர்ப்பமடைந்தார்கள். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை அவர்கள் கொன்றார்கள். இப்படி சிசு மரணங்கள் கரும்பு,கோப்பித் தோட்டங்களில் சர்வசாதாரண சம்பவங்களாகிக் கொண்டிருந்தன.

தொழிலாளர்களின் மத்தியில் இவ்வாறு நடைபெறும் கொலைகள்,தற்கொலைகள் நிர்வாகத்தாலும் அரசாலும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுவதில்லை;..!தனிமையாக வந்த பெண்களின் கதி மரணத்தை தழுவக் கூடியதாகவிருந்தது. பல பெண்கள் மேக நோய்களுக்கு ஆளானார்கள். நோய் கடுமையாகி பரிதாபகரமாக இறந்துக் கொண்டிருந்தார்கள். இந்த நோய் ஆண்களுக்கும் தொற்றியது.

மனைவிமார்களோடு வந்த ஆண்கள் கடுமையாநோய்வாய்பட்டாலும்,மனைவிகளை வசிப்பிடங்களில் தனியாக விட்டு விட்டு ஆஸ்பத்திரியில் தங்குவதற்கு பயப்பட்டார்கள். காம வெறி பிடித்தவர்களின் செயல்கள் சொல்லொன்னாத் துயரங்களை ஏற்படுத்தின. நோய்வாய் பட்ட பெண்கள், ஆஸ்பத்திரியிலும் தங்கி சுகம் பார்க்க விரும்புவதில்லை. நாட்டு வைத்தியங்களை நாடினார்கள்.

இந்த பாலியல் நிலைமை பிஜித் தீவு, கரும்புத் தோட்டங்களில் மிக மிகக் கொடூரமாகிக் கொண்டிருந்தது. தொல்லை தாங்க முடியாத பெண் தொழிலாளர்கள் காடுகளுக்குள் ஓடி மறைந்து மரணங்களைத் தழுவினார்கள். சில பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டார்கள். பிஜித் தீவுகளில் நடந்த கொடுமைகளை தமிழ் நாட்டுக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் “கரும்புத் தோட்டத்திலே” என்ற பாடலை எழுதிர இந்தியா முழுவதும் அறியும் வண்ணம் பிரச்சாரம் செய்தார்.

பாரதியாரின் கவிதைகளில் அவர் மிகவும் மனம் வருந்தி மனம் கலங்கிபாடிய பாடல் இது ஒன்றே என்று சொல்லலாம். இலங்கை கோப்பித் தொட்டங்களில் பெண்கள் படும் பாலியல் தொல்லைகள் மட்டும் இல்லாமல், நிறைய தொழிலாளர்கள் நோய்வாய் பட்டு இறந்துகொண்டிருக்கும் தகவல்களும் தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களின் சுக நலம் பற்றி எதுவிதநடவடிக்கைகளும் எடுக்காது இருந்து வந்த தகவல்களும் பத்திரிக்கைகள் மூலமாக பரவலாகிக் கொண்டிருந்த படியால் காலனித்துவ அரசாங்கங்களுக்கு ஆளுனர்கள் கட்டளையிடத் தொடங்கினார்கள்.

பிஜித் தீவுகளில் நடப்பது போன்று கொடூரமான பாலியல் தொல்லைகள் இலங்கையில் குறைவே என்று இலங்கை தோட்ட நிர்வாகிகள் அபிப்பிராயங்கள் சொன்னார்கள்.தொழிலாளர்களைப் பீடித்த மலேரியா காலரா நோய்கள், தோட்ட சொந்தக்காரர்களையும் பலியெடுக்கத் தொடங்கியதால் இலங்கை மருத்துவச் சட்டம் உருவாக்கப்பட்டு ((Medical wants Ordinance) தீவிரமாக தோட்டங்களில் செயல்படத் தொடங்கின.  தோட்டப் புறங்களில் 1871 ம் ஆண்டிலிருந்து 1876 ம் ஆண்டு வரை பெரியாஸ்பத்திரிகள் என்று பொது ஆஸ்பத்திரிகள் திறக்கப்பட்டன.

ரத்தினபுரி,குருனாகல், புத்தளம், கண்டி, கம்பளை, பதுளை, மாத்தளை. நுவரெலியா என்றும் பிரதேச ஆஸ்பத்திரிகளாக லிந்துலை, அப்புத்தலை, டிக்கோயா,உடபுசல்லாவ, கெலாபோக்கு, மடுல்சீமை, ரக்குவானை, பலாங்கொடை, பதுளை,புசல்லாவை, ரங்கல்ல, கொத்மலை,மஸ்கெலியா, மத்துரட்ட,மாத்தளை மேற்கு என திறக்கப்பட்டு, தேவையான மருத்துவ ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மருந்து வகைகள் என தோட்டப்புறங்களில் சுகாதார சேவைகள் விரிவடைந்தன.

இந்த வசதிகள் மூலமாகதொழிலாளர்கள், படிப்படியாக பாதுகாக்கப்பட்டார்கள். தோட்ட உரிமையாளர்களுக்கு, சட்டத்தின் மூலம் மனிதாபிமானம் கற்பிக்கப்பட்டது.! தொழிலாளர்கள் மனித உயிர்களாக மதிக்கப்பட்டார்கள்.! இவ்வாறு சமூக நலன்கள் படிப்படியாக தோட்டங்களில் வளர்ச்சியடைந்து வந்ததன் காரணமாக, ஓரளவு
தொழிலாளர்கள் நிம்மதி மூச்சு விடத் தொடங்கினார்கள்…

(தொடரும்)

– முனியாண்டி

கருத்து தெரிவிக்க