கட்டுரைகள்

மலையகத் தமிழரின் வரலாறும் அரசியலும்.

பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உலக நிலங்களை விஸ்தரித்துக் கொண்டதிலும்(Global expansion) தொழில் வளங்களையும் வர்த்தகத்தையும் ஆக்ரமித்துக் கொண்டதிலும் மிக சக்திமிக்க நாடாக…காலனித்து ஆட்சிகளுக்கு ஏகபோக சொந்தக்காரனாக திமிரோடு செயல் பட்ட நாடுதான் ஐக்கிய ராஜ்யமாகும்.. அல்லது …… பெரிய பிரித்தானியாவாகும்.!.

இந்த நாட்டின் ஏகாதிபத்திய சக்திக்கு ஏறக்குறைய 22 நாடுகள் அடிமைப் பட்டுக் கிடந்தன….! காலப் போக்கிலேதான் அவைகளின் விலங்குகள் கழற்றப்பட்டவைகளாக விடுதலை பெறத் தொடங்கின!.

அந்த நாடுகளுள்; இந்தியாவும் இலங்கையுமே இங்கு பேசு பொருளாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன….
காலனித்துவ வாதிகள் பிடிபட்ட இந்தியாவை தங்கள் ஆட்சிக்குள் அடக்கினர். முதல் கட்டமாக… நிலங்களை அபகரித்துக் கொண்டனர். நீர்ப்பாசன நீர் நிலைகளை அபகரித்துக் கொண்டனர்.

அவர்களின் பாரம்பரிய சொத்துரிமைகளுக்கு அரச வரி விதித்தனர். நிலத்துக்கும் நீருக்கும் வரி கட்டமுடியாத மக்கள் நிலங்களை இழந்தனர். காலனித்துவ ஆட்சினர், அம் மக்களின் சுய தொழிலை, சுய விவசாயத்தை, சுய உற்பத்தியை செய்ய விடாது அழித்தனர். உழைப்பின்றி..சம்பாத்தியமின்றி.. கையறு நிலைமைக்கு தள்ளப்பட்ட குடி மக்கள், பிரிட்டிஷ்காரர்கள் இறக்குமதி செய்த உணவுகளை வாங்கிச் சாப்பிடவும், உடு துணிகளை வாங்கி அணியவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

தாய் மண்ணிலேயே மண் உரிமை பறிக்கப்பட்டு, அகதிகளாகி நின்றனர். வழி தெரியாத மக்கள் வாடி நின்றனர். காலனித்துவ ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவை உணவு உற்பத்தி செய்யப்படாத நாடாக உருமாற்றி பஞ்சத்தை ஏற்படுத்தினர். பஞ்சம் தலை விரித்தாடியதால் மெட்ராசு மானிலத்தில் மட்டும் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்து போனார்களென்று பிரிட்டிஷ் ராணுவமே புள்ளி விபரம் காட்டியது..!

தேசிய உரிமைகளையும்… பாரம்பரிய உரிமைகளையும் இழந்து விட்ட மக்கள்…. உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள்.. ராஜரீகமாக ஒரு தேசத்து மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கையை முடமாக்கி… அழித்து விட்ட காலனித்துவ ஆட்சியினர் வெற்றியில் களித்தனர்..

அவர்களுக்கு வழி காட்டுவதாக தங்களது குடியேற்ற ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கை செய்வதற்கு தொழில் வழங்கி உதவி செய்வதாகக் கூறினார்கள். அவர்கள் ஆரம்பிக்கவிருக்கும் பெருந்தோட்டங்களுக்கு உழைப்பதற்கு தொழிலாளர் சக்தி தேவைப்பட்டது.

இந்த மக்களுக்கு உணவு, உடை தங்குமிடம் இனாமாகக் கொடுத்து, சம்பளம் வழங்கப்படுமென ஆசை காட்டி, அழைத்தனர். சொந்த மண்ணில் நெல்லரிசி பொங்கி… சோறு..கஞ்சி குடித்து உயிர் வாழ்ந்த மக்கள் பிரிட்டிஷ்காரனின் கோதுமை..சோளம் மா ரொட்டி உணவுக்காக தங்களின் கிராமிய உலகத்தைப் பிரிந்து… சொந்த மண்ணை விட்டகன்று… கடல் கடந்து, வாழ்க்கையை தேடிச் சென்றனர்….

காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட ஏறக் குறைய இருபத்திரண்டு நாடுகளுக்கு இந்தியத் தமிழ் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்களின் பின்னால் சென்ற பெரும் பயணம் மிகப் பெரிய கொடுமைகளையும், மிகப் பெரிய துயரங்களையும் சந்தித்தன. பூர்வீகமாக வாழ்ந்த சொந்தக் கிராமங்களிலிருந்து ஆயிர.. மாயிரம் மைல்கள் தூரத்தை காடு, மேடுகளில் கால் நடையாக நடந்து,பல பேரை வழியில் பறி கொடுத்து.. கடல் கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.…. கடல் கரையிலிருந்து மந்தைகளைப் போல வள்ளங்களில் ஏற்றப்பட்டார்கள்..

காலனித்துவ நாடுகளை நோக்கி ஆழ் கடலில் பயனித்த அவர்களது நம்பிக்கைப் படகுகள்(“னுசநயஅ டீழயவள”) கரைகளில் இறங்குமுன்பே கடலுக்குள்ளே மூழ்கிப் போயின…! இந்தக் கடல் மரணங்கள் கணக்கற்றவை..!

இந்த வரலாறு இன்று வரை உலகத்துக்குத் தெரியாமல் போய் விட்டது..! உலக அதிசியங்கள் எழுதி வைக்கும் புத்தகத்தில் பதியப் படாமல் போய் விட்டது..!ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு நீண்ட நடையாகவே (“ The long Walk”) நிலத்தைக் கடந்து… கடலைக் கடந்து பயணம் செய்த வரலாறு அதிசயமாக்கப்படவில்லை..!

இலங்கை முதல், மொரிஷியஸ் தீவுகள், பிஜித் தீவுகள், மேற்கிந்திய தீவுகள், ட்ரினிடொட் தீவுகள், இன்னும் தென் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, சீனா, ஜப்பான், மலேயா ஆகிய நாடுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக குடியேற்றப்பட்டார்கள்.

இவ்வாறு காட்டு பயணங்களிலும், கடல் பயணங்களிலும் எண்ணற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டே இருந்தன.. குடியேற்ற நாடுகளின் இயற்கை காடுகளை இந்த மக்களே அழித்து, சுத்தம் செய்தனர். காடுகள் சுத்தம் செய்த காலத்தில் ஆயிரம் ஆயிரமாக மரணத்தைத் தழுவினார்கள். அங்கெல்லாம் அவர்களின் உடல் உறுப்புகள் உரமாகின..! அவர்களின் மரணத்தின் மேல், பருத்தியும் கரும்பும்.. கோப்பியும்..தேயிலையும் பிரிட்டிஷ்காரர்களின் உலக வர்த்தகமாகியது….!

உலக வர்த்தகத்தில் இந்த பெருந் தோட்ட பணப் பயிர்ச் செய்கை கொடி கட்டிப்பறந்தது. அந்தப் பயிர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தியத் தமிழ் மக்கள் வாழ்வா… சாவா… என்ற நிலைமையில் தத்தளித்தார்கள்.

இந்த குடியேற்றங்கள் 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கின…. இலங்கைக்கு குடி வந்த தென்னாட்டுத் தமிழ் பெருங் குடி மக்களின் இந்தத் துயர வரலாற்றை ஊடுருவிப் பார்ப்பதே இக் கட்டுரையின் ஆரம்பமாகும்….

இந்த மக்களின் வரலாறு அவர்களின் வியர்வையிலும்..அவர்களின் கண்ணீரிலும்…அவர்களின் இரத்தத்திலும் குழைத்தெடுத்த மையினால் எழுதப்பட்டவை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.;.(Their history is written in the ink of their sweat…their tears… and their blood….)

மன்னர் ஆட்சிகள் அழிந்தன. பிரிட்டிஷ் கொடிகள் பறந்தன. இலங்கையை கைப்பற்றிய பிரிட்டிஷ் ஆட்சியினர், நாட்டுக்குள் நுழைவதற்கு கொழும்பிலிருந்து கண்டிக்கு பாதை உருவாக்கத் தொடங்கினர். முதல் கட்டத் தொழிலாளர்களாக 1817 ம் ஆண்டளவில் தென்னிந்தியத் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களின் உழைப்பிலும், வியர்வையிலும், கண்ணீரிலும், ரத்தத்திலும் கண்டு பிடிக்கப்பட்டதே கொழும்பு – கண்டி பாதையாகும்…!

பாதை உருவாகிய பின் நாட்டின் நிர்மாண வேலைகள் அதி வேகமாக நடைபெற்றன. 1823 ம் ஆண்டு இலங்கை தேசாதிபதியாக இருந்த எட்வட் பான்ஸ் அவர்கள் கோப்பி பயிர்ச் செய்கை உண்டாக்குவதற்கு பேராதெனியவில் முயற்சித்த போது 150 தொழிலாளர்களை வரவழைத்தார்.

ஹென்றி பேர்ட், ஜோர்ஜ் பேர்ட் ஆகிய இரு சகோதரர்களும் கம்பளை சிங்கபிட்டியவில் கோப்பி பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் நூறு…ஆயிரம்…லட்சம் என.. இவர்களின் பயிர்ச் செய்கைக்கு தேவைப்பட்ட தொழிலாளர்களை தமிழ் நாட்டிலிருந்து வரவழைத்தனர். அவ்வாறு வருவதற்கு இந்தியாவில் இவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே ஆள்கட்டி வருபவர்களாக கங்காணி என்ற பெயரில் சிலரையும் நியமித்தார்கள். மக்கள் கூட்டங்கள் இவர்கள் வழியாகவே இலங்கைக்கு வந்தார்கள்.

மன்னார் வனாந்தரங்களுக்குள் நுழைந்து, மாத்தளை வரை மிருகங்களுக்கும், விச ஜந்துக்களுக்கும் இரையாகி வழிப் பயணத்திலேயே பலர் காணாமல் போன நிலையில் எஞ்சிய கூட்டங்களே மாத்தளையை வந்தடைந்தனர். மாத்தளை, கண்டி வழியாக அவிசாவளை, ரத்தினபுரி, பலாங்கொடை, நுவரெலியா, பண்டாரவளை, பதுளை, மடுல்சீமை என சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் மண்டிக் கிடந்த இயற்கைக் காடுகளை அழித்தார்கள்.

கோப்பிச் செடிகளை உண்டாக்கினார்கள். இது போலவே கொழும்பிலிருந்து, களுத்துறை, மத்துகம, காலி, மாத்தறை எனும் தென் மாகாண காடுகளையும் அழித்து, கோப்பி பயிரிட்டார்கள். இந்த ஆரம்பத்திலிருந்தே எமது மக்களின் வரலாறு தோற்றம் பெற்றது.

இதற்கு பிறகு, இவர்கள் முகம் கொடுத்த துயரங்கள், அனுபவங்கள் பற்றி தொடர்ந்து பேசப் படும்… இந்த வரலாற்றை ஒவ்வொரு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் இதயங்களில் பதித்து வைத்துக் கொண்டால்தான் இன்றைய, நாளைய எமது தேசிய நிலைமையை உரிமையோடு நிலைநாட்டிக் கொள்ள முடியும்…. (வரலாறு தொடரும்….)

முனியாண்டி.

கருத்து தெரிவிக்க