மலையகச் செய்திகள்

அரசாங்கம் கபட நாடகம் ஆடுகிறது -சுதந்திர கட்சி மாவட்ட அமைப்பாளர்

பொலிஸாரினாலோ, நீதிமன்றத்தினாலோ விசாரணைகள் நடத்தாமல் வெறுமனே பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்துவது சட்டத்திற்கு புறம்பான செயற்பாடு என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்து வரும் நிலையில் இன்று அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரின் மீது சந்தேகத்தின் பேரில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இவர்கள் மீது முறையான விசாரணைகள் நடத்தாது, நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற கபட நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றுகிறது.

நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொண்ட இந்த பயங்கரவாத தாக்குதலோடு தொடர்புபட்டவர்கள் தொடர்பில் நிலையான விசாரணை ஒன்றை இந்த அரசாங்கம் நடத்த தவறியுள்ளது.

தேர்தலில் முஸ்லீம் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை அரசாங்கம் காப்பாற்றி வருகின்றது. இது உண்மையில் நாட்டிற்கு செய்கின்ற துரோக செயலாகும்.

எனவே இவ்வாறான நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புப்பட்டவர்கள் குறித்து முறையான ஒரு விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க