உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியங்களை பதிவுசெய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சாட்சியமளிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் அழைக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ், உயிர்த்த ஞாயிறுத் தற்கொலையாளி ஸஹ்ரான், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்போது தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர், பிரதிசபாநாயகர்- ஆனந்த குமாரஸ்ரீயிடம் இது குறித்து வினா எழுப்பப்பட்டது.
ஹிஸ்புல்லாஹ் கூறிய தகவல் தொடர்பில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்களா? என்று கேட்கப்பட்டமைக்கு இது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
சாட்சிகளாக யாரை அழைப்பது என்பது ஏற்கனவே குழுவின் அங்கத்தவர்களால் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே சாட்சியங்களுக்கும் பதிவுசெய்யப்படுகின்றன.
இந்தநிலையில் சாட்சியங்களில் பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு புதிய சாட்சியங்களை அழைக்கமுடியும் என்றும் குமாரஸ்ரீ தெரிவித்தார்.
இதேவேளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் விரும்பினால் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ சாட்சியம் வழங்கமுடியும் என்று அறிவிப்பை தெரிவுக்குழு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது புகைப்படக்கருவிகளுக்கு மத்தியில் அல்லது அவை இல்லாமல் சாட்சியமளிக்க ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வாய்ப்பை வழங்குவதென்றும் தெரிவுக்குழு கொள்கை அளவில் தீர்மானம் எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவை கடுமையாக விமர்சனம் செய்யும் ஜனாதிபதி அதில் பிரசன்னமாக மாட்டார் என்றே கருதப்படுகிறது.
பிரதமர், இந்த குழுவின் முன்னாள் சாட்சியமளிக்க விரும்பினாலும் அது எஞ்சியிருக்கும் காலத்தில் ஜனாதிபதியை பகைத்துக்கொள்ளவேண்டிருக்கும்? அல்லது எதிர்கால தேர்தல் பிரசாரத்துக்கு இந்த சாட்சியம் உதவும்?; என்ற அடிப்படையில் அவர் முடிவை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க