தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் இலங்கையைப் போல் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய செய்தி சேவைகள் இதனை தெரிவித்துள்ளது. குறித்த செய்திகளில் மேலும்,
கோவை உக்கடம் பகுதியில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், நேற்று கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடனும், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திலும் முகமது அசாருதீனுக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இலங்கை பாணியிலான தீவிரவாதத் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அசாருதீனின் வலைத்தள பதிவுகள் மூலம் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இலங்கை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவையை ஒட்டியுள்ள பாலக்காடு பகுதியில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபூபக்கருக்கும், உக்கடம் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கும் அசாருதீனுக்கும் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசாருதீனின் 5 நண்பர்களிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க