ஈழத்தின் இன்னும் வெளிவராத கலைஞர்களில் யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்திலும் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் கல்வி பயின்று நேரலையில் சினிமா கற்கைநெறியை தொடர்ந்து பல உச்சங்களைத் தொட்ட இராஜசேகரம் கதிர்சனும் ஒருவர்.
ஊடகன் குழு அவரிடம் இருந்து பல தகவல்களை பெற்றுக்கொண்டது.
01.உங்களுடைய கலைப்பயணம் பற்றி கூறுங்கள்?
‘தீமைகள் வெல்லும் என்பதே என்னுடைய முதற் குறும்படம் . ‘திருடர் கூட்டம்’ குறும்திரைப்படத்திலே செம்மையாக்குதல் (Editing), கதை வசனகர்த்தா (Story writer), ஒளிப்பதிவாளர் (Cinematographer), இயக்குனர் (Director) என்ற பரிமாணங்களில் நான் ஈடுபட்டுள்ளேன்.
‘குற்றம்’ எனும் குறுந்திரைப்படத்தினை திரையரங்கில் வெளியிட்டோம்.
‘குருதிப்பூக்கள்’; பாடலினை இயக்கினேன்.
“ கோடாலீ” குறுந்திரைப்படம் செல்லா திரையரங்கில் வெளியிட்டோம். “ மத்திய சிறைச்சாலை, “காட்சிப் பேழை” போன்ற குறும்படங்களில் எனது நடிப்பைக் காணலாம்.
“சட்டென்று மாறுது வானிலை” என்ற பாடலினை செம்மையாக்கல் (Editing) செய்தேன். ‘கடன்காரன்’; என்ற மூன்று நிமிடக் குறும்படத்திற்கு இசையமைப்பு (Music), ஒளிப்பதிவு (Cinematography)செய்தேன்.
தற்போது “Jaffna 2017” குறும்படத்திற்கான இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
02. முதன்முறை உங்கள் கலைப்பயணத்தின் அரிச்சுவடி யார்?
குறும்படம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது ‘மதிசுதா’ அண்ணாவாலேயே. அவர்தான் எனக்கு ஆரம்ப அரிச்சுவடி.
குறும்படம் எப்படி கையாள வேண்டும் என நான் தொலைபேசி அழைப்பில் வினாவிய போது நிறைய எண்ணங்களை (ideas ) எனக்கு கொடுத்தார்.
அவருடைய திட்டத்தில்(Project) என்னையும் இணைப்பதாக கூறியுள்ளார். நான் வெளியிட்ட குறும்படங்களிற்கு அண்ணாவை அழைப்பேன். அவர் கூறும் திருத்தங்களை நிச்சயம் அடுத்த படத்தில் கவனத்திற் கொண்டு திருத்துவேன்.
03.உங்களுடைய கலைப்பயணத்தில் எந்தெந்த முகங்களில் நடை போடுகிறீர்கள்? உங்களுக்கு சௌகரியமான முகம் எது?
‘தீமைதான் வெல்லும்’ என்பதே எனது முதற் குறும்படம். இதன் பின்னர் செம்மையாக்குனர்(Editor), கதை வசனகர்த்தா(Story writer), ஒளிப்பதிவாளர்(Cinematographer), இயக்குனர்(Director), தயாரிப்பாளர்(Producer), இசையமைப்பாளர்(Music composer) என்கிற தளங்களில் வலம் வந்துள்ளேன். ஓரிரு குறும்படங்களில் எனது நடிப்பையும் கண்டு கொள்ளலாம்.
சௌகரியமான முகமாக நான் மனதார நினைப்பது ஓர் ஆளுமையுடன் இவற்றை தெரிந்துள்ளமையால் திரைக்குப் பின் இருப்பதே என் விருப்பம்.
4. ஈழத்தில் இளைய தலைமுறையில் இன்னும் வெளிவராத சாதனையாளனாக நீங்கள் கூற விரும்புவது ?
எனக்கு பிடித்த துறை (Field)சினிமா தான். எங்களது திறமைகளிற்கான சந்தைப்படுத்தல்(Marketing) இங்கு இல்லை.
இந்தியப்படங்களே இங்கே அதிகம் விற்பனையாகின்றன.
இலங்கையிலே குறுந்திரைப்படங்களிற்கான சந்தைப்படுத்தல் இங்கு உருவானால் நிச்சயம் தொழில்நுட்பம் சார் முன்னேற்றமான முழுநீளத்திரைப்படங்களையும் வெளியிடலாம்.
ஊடகங்களின் ஆதரவு இந்திய சினிமாவிற்கு இருப்பது போல் எமக்கு இங்கு இல்லை.
ஈழத்தில் இன்னும் பல சாதனையாளர்கள் இருப்பது பொருளாதார பின்னோக்குகளால் இன்னும் வெளிவரவில்லை.
5.உங்களுடைய குறுந்திரைப்படம் “திருடர் கூட்டம்’’; பற்றிய உங்கள் அனுபவம்.
‘திருடர்கூட்டம்’ குறுந்திரைப்படத்திற்கு வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் படப்பிடிப்புக்கள் நடைபெற்றன.
முதன்முறையாக சில தொழில்நுட்ப வசதிகள், கையாளல்களை Youtube இன் வசதியுடன் நானும் எனது படக்குழுவினரும் சேர்ந்து உருவாக்கிய குறும்படம். இதுவே எமது படக்குழுவிற்கான முதலாவது சொந்தத் திட்டம்(Project) ஆகும்.
இக் குறுந்திரைப்படத்திற்காக சிறந்த தயாாரிப்பாளருக்கான விருது (Best Director Award)இனை YTS(Colombo) நிறுவனத்தினால் கொடுக்கப்பட்டது.
6.மத்திய சிறைச்சாலை குறும்படம் ஈழத்தின் உண்மைக் கதைகளை மையமாக கொண்டதா?
‘மத்தியசிறைச்சாலை’ வழமையாக இடம்பெறும் நிகழ்வுகளை வைத்து பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்த குறும்படம் ஆகும். இதனை இயக்குனர் ‘அஜெய் லச்மன்’ இயக்கினார்.
7.உங்களுடைய குறும்படத்திற்கான கதைக்கரு எதனை மையமாகக் கொண்டுள்ளது? கதைக்கருக்கள் பார்வையாளருக்கு எதாவது ஒரு செய்தியை சொல்ல வருவதில் திருப்தி அடைந்துள்ளீர்களா?
குறும்படங்களில் சிறிய கதைக்கருவே காணப்படுகின்றது. உதாரணமாக எனது திரைப்படம் ‘குற்றம்’ போதையில் வாகனம் செலுத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி கூறுவதாக காணப்படுகின்றது. ஒரு விழிப்புணர்வுக் குறும்படமாக இதை உதாரணம் கொண்டு பார்வையிட பொலிஸார் பலரை பரிந்துரை செய்தனர்.
இறுதியாக எனது தயாரிப்பில் உருவான ‘கோடாலீ’ குறுந்திரைப்படம் இருபது வீதமான மக்களுக்கே நான் கூறவந்த விடயம் முழுதாக விளங்கியது. அது எனக்கு திருப்தியையே தந்தது. ஆனால் இதைத்தவிர ஏனைய குறுந்திரைப்படங்கள் பார்வையாளருக்கு விளங்க கூடிய வகையில் எதாவது ஒரு கதைக்கருவைக் கொண்டே காணப்படுகின்றன.
8. உங்களுடைய திரைப்பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள்.
கலைப்பயணத்தின் முக்கிய பிரச்சினையாக பொருளாதாரமே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் குறுந்திரைப்படம் செய்வதை ஓர் கெட்ட செயலாக பார்க்கின்றார்கள். படப்பிடிப்பிற்கு முக்கியமாக ஈழத்தில் அனுமதி பெற்றுக் கொள்வது கடினமே.
படப்பிடிப்பு என்றவுடன் தமிழர் பிரச்சினையை எடுப்பதாக நினைத்து ‘கோடாலீ’ திரைப்படத்தின் போது இடையே விசுவமடுவில் படப்பிடிப்பு பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டது.
குடும்பப் பாங்கான பெண், நடிகையாக வெளிவரும் சமயம் அப்பெண்ணை சமுதாயம் வேறுவிதமாக பார்ப்பதால் நிரந்தரமாக ஓர் நடிகை கிடைப்பது கஸ்டமே. அப்படித் தேவையெனில் கொழும்பிற்கே செல்ல வேண்டியுள்ளது.
ஒரு குறும்படத்தை வெளியிடுவதற்கான கட்டுப்பாடுகளில் பலதடவை சவாலாகவே காணப்பட்டது. வரி விடயம் முதல் அனுமதி பெறும் வரை.
9. ஈழத்தில் இன்று இளைஞர்கள் பலர் குறும்படம் என்ற தளத்தில் இறங்குகிறார்கள். அவர்கள் ஈழத்தின் சினிமா கலாசாரத்தை எந்நிலைக்கு தள்ளுகின்றனர்.
இன்று பலர் படம் எடுப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். என்னிடமும் கேட்பார்கள் “ அண்ணா நான் உங்கட Team ல் சேரலாமா?” என்று.எல்லோரும் செய்ய வேண்டும் படம். ஒரு பத்து பேர் செய்யும் போதே கடைசி 5 பேர் வரை வெளியே வருவார்கள்.
நல்ல படைப்புக்களைக் கொடுக்க நிறைய இளைஞர்கள் முன்வர வேண்டும். அப்போதே போட்டி உருவாகி சினிமா சமூகம் சிறந்த படைப்புக்களை வெளியிட்டு வர்த்தக சினிமா உருவாக சந்தர்ப்பம் கிடைக்கும்.
10. வளர்ந்து வரும் உங்களைப் போன்ற திரையுலகில் ஆர்வமுள்ள கலைஞர்களிற்கு நீங்கள் கூற விரும்புவது .
எல்லோரும் இந்த துறைக்கு( Field) வாங்க துறைக்குள் (Field)குள் இறங்கும் போது சிறந்த களம் கிடைக்கும்.
நிறையபேர் வரும்போதே போட்டி ஒன்று உருவாகும்.
போட்டி ஒன்று உருவாகும் போதே நல்ல படைப்பு வரும். எதையாவது செய்து வெளியிடும் போதே நாமும் இருக்கின்றோம் என்றும் நமது திறமையும் வெளிப்படும்.
தோல்வியில் முடிந்தாலும் நிச்சயம் துவண்டுவிடாமல் நீங்கள் எதிர்நீச்சல் போட்டு கொண்டு இருக்கும் போதே உங்களைப் பற்றியதும் உங்கள் திறமைகளும் வெளிவந்து வாய்ப்புக்கள் ஏற்படும்.
-கிரிசா சுரேந்திரன்-
ஊடகக் கற்கைகள் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
கருத்து தெரிவிக்க