உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையின் பரீட்சார்த்த நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொருத்தமானதாக சிறு ஏற்றுமதித் திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட கறுவா, மிளகு, கமுகு, இஞ்சி, மஞ்சள் போன்ற ஏற்றுமதிப் பயிர்கள் பரீட்சார்த்த முறையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலுள்ள வீட்டுத் தோட்டங்களில் நடப்பட்டு தேவையான தொழினுட்ப அறிவினை வழங்கி பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதல் கட்டமாக 2013 ஆம் அண்டு பட்டிப்பளை, செங்கலடி, பிரதேசங்களில் 5000 கறுவாக்கன்றுகள் பயிரிடப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் அறுவடை உ.உதயஸ்ரீதர் பிரதேச செயலாளரின் தலைமையில் மாத்தளை ஏற்றுமதி விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மற்றும் தொழினுட்ப உத்தியோகத்தர்களின் ஆதரவுடன் மாவடிவேம்பு விவசாய பண்ணையில் இடம்பெற்றது.

இதன்போது விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டு ஆரையம்பதி பகுதிக்கு 1200 கமுகங் கன்றுகள் வழங்கப்பட்டிருந்ததுடன் அவை தற்போது காய்க்கும் நிலைக்கும் வந்துள்ளன.

2016 ஆம் ஆண்டு செங்கலடி, வாகரைப் பிரதேசங்களில் பரீட்சார்த்தமாக நடப்பட்ட மிளகுக் கன்றுகள் மிக வறட்சியான காலநிலையையும் தாண்டி தற்போது செழித்து வளர்ந்து காய்த்து அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது.

ஈரவலயம், இடைவெப்ப வலயம் போன்றவற்றிற்கு மாத்திரம் பொருத்தமானது என அறியப்பட்ட இப்பயிர்கள் டீ.எல் மூன்று உலர் கால வலயத்திற்கும் பொருத்தமான பயிராக அமைந்துள்ளது.

நீண்ட காலத்திற்கு பயன் தரக்கூடிய இத்தகைய ஏற்றுமதிப் பயிர்களை ஏனைய பயிர்களுக்கு மாற்றீடாக பயிரிடுவதன் மூலம் அதிக இலாபம் ஈட்டலாம்.

அத்துடன் சூழலுக்கு நட்புறவான வகையில் கிளிரிசீடியா தடிகளுடன் நடப்படும் இக்கொடிகளின் இருக்கையினால் யானைகள் உட்பிரவேசிப்பதனை தடுக்கக்கூடியதாகவும் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இதன் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் விவசாயிகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களும் ஆராய்ச்சி திட்டங்களும் மாவட்டத்தில் தொடர்ந்தேர்ச்சியாக நடைமறைப்படுத்துவது மிகவும் அவசியமாகவுள்ளதாக மட்டக்களப்பு கச்சேரியின் ஊடகப்பிரிவு செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க