உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோத தொடர்பாடல் நிலையம் முற்றுகை

நீர்கொழும்பு பகுதியில் மிக சூட்சமமான முறையில் நடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் தொடர்பாடல் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத தொடர்பாடல் நிலையம் இன்று முற்றுகையிடப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

நீர்கொழும்பு – ஏத்துகால பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாக, போலீஸ் விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பொன்றின் போதே இந்த தொடர்பாடல் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டவிரோத தொடர்பாடல் நிலையத்திலிருந்து சீன பிரஜையொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சட்டவிரோத தொடர்பாடல் நிலையத்திலிருந்து 402 அதிநவீன கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அந்த கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்படும் சந்தர்ப்பத்தில் அனைத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் இணைய வசதி செயற்படுத்தப்பட்டிருந்ததாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், குறித்த வீட்டிலிருந்து பல்வேறு தொலைபேசி நிறுவனங்களுக்கு சொந்தமான செயற்படுத்தப்பட்ட 17,421 தொலைபேசி சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேபோன்று 60 ரவுட்டர்ஸ்களும், 3 மடிக்கணினிகளும் உள்ளிட்ட மேலும் பல்வேறு தொலைத் தொடர்பு சாதனங்கள் பல கைப்பற்றப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

கைது செய்யப்பட்டவர்களிலுள்ள சீன பிரஜைக்கு, விஸா மற்றும் கடவுச்சீட்டு ஆகியன இல்லாமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டவிரோத தொலைத்தொடர்பு நிலையமாக இதனை கருத்தில் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமான முறையில் தொலைத்தொடர்பு நிலையமொன்றை நடாத்தி சென்றதன் ஊடாக, இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகை வருமானத்தை கொள்ளையிட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

கருத்து தெரிவிக்க