இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, இன்று தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையில் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
“முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மையினர். ஆனால் உலகில் நாங்கள் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இலகுவாக எங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று, யாரும் நினைத்து விடக் கூடாது” எனவும் அவர் பேசினார்.
“பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் வரையில்தான் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மீதி அனைவரும் அப்பாவிகள். தொழுகைக்குப் பிறகு ஓதும் பிரார்த்தனைகளை எழுதி வைத்திருந்தவர்கள் கூட, ஊவா மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதே போன்று குரான் மற்றும் ஹதீஸ் பிரதிகளை வைத்திருந்தவர்களும் பல மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்”. என அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்க