ஏறாவூரில் தமிழ் மக்களின் நிலவளத்தை சூறையாடும் நோக்கில் வீதி போடப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் தமிழ் மக்கள் வாழும் கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்த அவர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏறாவூரில் உள்ள தமிழ் கிராமங்களின் பின் பகுதியினூடாக ஊடறுத்து ஏறாவூர் முஸ்லிம் பகுதியிலிருந்து 2.45 கி.மீ காபட் வீதி இடும் திட்டம் ஒன்றை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தினூடாக அப்பகுதி அரசியல்வாதிகள் கொண்டு வந்துள்ளனர் என கூறினார்.
இவ்வீதி ஏறாவூர் காதியார் சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஏறாவூர்-05 தமிழ்க் கிராமம், சேனைக்குடியிருப்பு தமிழ்க்கிராமம், பழைய ஊர் தமிழ்க்கிராமம், அம்மன் புரம் தமிழ்க்கிராமம், குமாரவேலியார் தமிழ்க்கிராமம் ஆகிய கிராமங்களின் பின் பகுதிகளை ஊடறுத்து பதுளை வீதியுடன் இணைகிறது என்றும் தெரிவித்தார்.
முஸ்லிம் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் வீதி தமிழ்க்கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் போது விவசாயக் காணி, குடியிருப்புக் காணி, நீர் நிலை, கால் நடை வளர்ப்புக் காணி என பல வாழ்வாதாரக் காணிகள் உள்வாங்கப்படும். அத்துடன் காலப்போக்கில் பின் பக்கமாக மக்களது குடியிருப்புக் காணிகளும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சட்டத்துக்கு விரோதமான பொருட்களைக் கொண்டு செல்ல வாய்ப்புண்டு. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு தமிழ்ப் பகுதிகளையே 99 வீதம் உள்ளடக்கியிருக்கும் போது அந்த பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் வீதியை எப்படி தீர்மானிக்க முடியும்? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வி எழுப்பினார்.
கருத்து தெரிவிக்க