வணிக செய்திகள்

பயங்கரவாத தாக்குதலால் 26 பில்லியன் இழப்பு-மத்திய வங்கி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் இலங்கையில் 26 பில்லியன் வரையிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் இந்த இழப்பினால் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலினால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய சிக்கல் எழுந்த நிலையில் அது தொடர்பான மதிப்பீடுகளை ஆராயும் நடவடிக்கைகள் மத்திய வங்கியினால் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மத்திய வங்கி இழப்பீட்டு தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

தாக்குதலினால் சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி அதன் பாதிப்புக்களையும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதி தாக்குதல் இடம்பெற முன்னர் முன்பதிவு செய்திருந்த 16 127 சுற்றுலாப்பயணிகள் தமது பயணத்தை இரத்து செய்தனர்.

தாக்குதலை தொடர்ந்து பயண ரத்துக்கள் அதிகரித்து சுற்றுலாத்துறை படுவீழ்ச்சி கண்டது. இதனால் நாட்டின் மொத்த வருமானம், நீண்ட கால தொழில் வாய்ப்புகள் என்பன பாதிப்படைந்துள்ளன.

அத்துடன் சுற்றுலாத்துறை சார்ந்தவர்களின் மீள்முதலீடுகளையும் முதலீட்டாளர்களின் கடன்களை மீள செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மே, ஜூன் மாதங்களிலும் சுற்றுலாத்துறையில் குறிப்பிடும் படியான வரவின்மையால் மீள கட்டியெழுப்ப முடியாத நிலை காணப்படுகின்றது என மத்திய வங்கி மேலும் தெரிவிக்கிறது.

கருத்து தெரிவிக்க