கட்டுரைகள்

தேயிலைத்துறை தொழிலாளர்களின் தொழில் உரிமையை பாதுகாக்கும் திட்டம்

சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ் சந்திரபோஸ்- இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
——————————————————————————————————————————–

தேயிலைத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழில் உரிமைகளை பெறவேண்டும் என்ற அடிப்படையில் கொள்கை ஒன்று வகுக்கப்படவேண்;டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

தன்மூலம் அவர்கள் நில உரிமைகளை பெறமுடியாதபோதிலும் தொழில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்தத் திட்டத்தின்போது தொழிலாளர்களுக்கு தற்போதைய வருமானத்தைக் காட்டிலும் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ் சந்திரபோஸ் குறிப்பிட்டுள்ளார்.

சில பெருந்தோட்டங்கள் தமக்கு நட்டம் ஏற்படுவதாக கூறி, தமது தோட்டத்தின் தேயிலைச்செடிகளை தோட்டத்தொழிலாளர்களுக்கு மத்தியில் பகிர்ந்தளித்துள்ளன.

குறிப்பாக களனிவெலி, காவத்தை பெருந்தோட்ட யாக்கம்; போன்றவை கடந்த ஐந்து வருடங்களாக இந்த முயற்சியை பரீட்சாத்தமாக மேற்கொண்டு வருகின்றன.

இதன்கீழ் சுமார் 1500 தேயிலை மரங்கள் ஒருவருக்கு வழங்கப்படுகின்றன.

இதற்கான பசளை, மற்றும் இரசாயனக்கலவைகளை தோட்ட முகாமைத்துவம் தொழிலாளர்களுக்கு 3 மாதக்கடன் அடிப்படையில் வழங்குகிறது.

தேவைப்படின் தேயிலைத்தொழில்துறையில் அனுபவம் பெற்ற தொழிலாளி ஒருவரையும் தோட்ட முகாமை குறித்த திட்டத்துக்கு வழங்குகிறது.

அதற்கான கொடுப்பனவையும் தோட்ட நிறுவனம் தேயிலை உற்பத்தியாளரிடம் இருந்துப் பெற்றுக்கொள்கிறது.

இதில் என்ன புதுமை என்றால் பெருந்தோட்ட நிறுவனங்கள், தாம், தொழிலாளர்களுக்கு வழங்கும் நாள் வேதனத்தைக்காட்டிலும் தொழிலாளர்களின் தேயிலை மரங்களுக்காக பணிபுரியும் தோட்ட நிர்வாகம் சார்பான தொழிலாளியின் வேதனம் 200 ரூபா வரையில் அதிகமாகும்.

முன்னர் தொழிலாளி ஒருவரின் நாள் வேதனம் 600 ரூபாவாக இருந்தபோது தோட்ட நிர்வாகம் தொழிலாளிகளின் தேயிலை மரங்களுக்கு பணிபுரியும் தமது சார்பிலான தொழிலாளிக்கான வேதனத்தை 800 ரூபாவாக அறிவி;ட்டதை எஸ் சந்திரபோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுபுறத்தில் இந்த தேயிலைச்செடிகளை பெருந்தோட்ட தொழிலாளர்கள் பராமரித்து அதன் மூலம் தமது வருமானத்தை பெறுகின்றனர்.

இது அவர்கள் ஏனைய நாட்களில் பெறும் வருமானத்தைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளதாக விரிவுரையாளர் சந்திரபோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை தொழிலாளர் மத்தியில் அறிமுகப்படுத்துவதன் மூலம் தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் இந்தத் துறையில் நட்டமேற்படுகிறது என்று கூறிக்கொண்டிருக்கும் நிலை தவிர்க்கப்படும்.

இரண்டு வருடங்ளுக்கு ஒருமுறை கூட்டு உடன்படிக்கை செய்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் ஏற்படாது.

மறுபுறத்தில் தொழிலாளர்கள் முதலீடுகள், புதிய தொழில்நுட்பம் என்பவற்றின் மூலம் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

அத்துடன் தற்போது கேள்வி எழுப்பப்படுகின்ற மருத்துவக்குணம் கொண்ட பச்சை தேயிலை உற்பத்தியையும் தொழிலாளர்கள் மேற்கொள்ளமுடியும்.

இந்த திட்டம் ஜப்பானில் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.
அங்கு  4 ஹெக்டேயர் தேயிலைக்காணியை வைத்துள்ளவர்கள் கூட தேயிலை தொழிற்சாலையை நடத்துகின்றனர்.

ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகளில் ஒருவரான ரொஸான் ராஜதுரை   திட்டம். ஒன்றை தயாரித்திருக்கிறார்.

இதனடிப்படையிலேயே அவரின் கீழுள்ள தேயிலைத்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு தேயிலைச்செடிகளை பகிர்ந்தளிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தநிலையில் மலையக சமூகத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் இணைந்து இந்த வரைபுத் திட்டத்தை மேலும் மெருகூட்டி, இந்தத் திட்டத்தை ஏனைய பெருந்தோட்டத்துறைத் தோட்டங்களிலும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கவேண்டும்.

இதன்போதே பெருந்தோட்டத்தொழிலாளர்களின் தங்கியிருத்தல் பொருளாதாரம் முடிந்து சுயப்பொருளாதார ஆளுமை வளரும்.

இது மலையகத்தின் தற்போதுள்ளவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கும் தொழில்  உரிமை அங்கீகாரத்தை வழங்கும்.

அத்துடன் மலையகத்தை விட்டு நகர்புறங்களுக்கு முழுமையாக இடம்பெயரும் எண்ணமும் இல்லாதுபோகும்;.

மொத்தத்தில் மலையகத்தின் இருப்பை உறுதி செய்துக்கொள்ளமுடியும்

கருத்து தெரிவிக்க