கட்டுரைகள்

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் இலங்கையின் தேசியக்கொள்கை…..?

இலங்கையில் சர்வதேச ஊடுருவல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்கள் வழிவகுத்துவிட்டதாகவே கருதவேண்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியன்று இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச தீவிரவாதிகளின் இலங்கைக்கிளையினர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

கிறிஸ்தவ மக்களை இலக்குவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதன்போது 200க்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

அதனைத் தவிர 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் அதிகரித்து வந்த வெளிநாடுகளின் முதலீடுகளை ஒரேயடியாக தகர்க்கும் செயற்பாடாக இந்தத் தாக்குதல்கள் அமைந்து விட்டன.

அது மட்டுமல்லாமல், இலங்கையில் மிகவேகமாக வளர்;ச்சிப்பெற்று வந்த சுற்றுலாத்துறைக்கும் பாரிய அடி வீழ்ந்துள்ளது.

சுற்றுலாத்துறை முழுமையாகவே சிதறடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த விடயம் குறி;த்து மத்திய வங்கியின் ஆளுநரும் கருத்துரைத்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் பாதிப்பு, இலங்கையின் மொத்த பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை சுற்றுலாத்துறையின் மீட்சியை எதிர்பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொருளாதாரத்தின் தாக்கத்தை விடுத்து இலங்கையின் பாதுகாப்பு பக்கம் திரும்பிப்பார்த்தால், ஆபத்தான பல விடயங்கள் அங்கே தெரிகின்றன.

ஏற்கனவே இலங்கை. பல்வேறு நாடுகளின் செல்லப்பிள்ளையாகவும் சந்தர்ப்பத்துக்கு சமாளித்துச் செல்லும் நல்லப்பிள்ளையாகவும் தம்மை காட்டிக்கொண்டு வருகிறது.

இது உண்மையில் தேசியக்கொள்கை ஒன்று இல்லாமைக் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால், அது அமரிக்காவுடனும் இந்தியாவுடன் நெருங்கிப்பழகும் தன்மை உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்தால், அது சீனா மற்றும் ரஸ்யாவுடனும் நெருங்கிப்போகும் நிலை உள்ளது.

அதாவது இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கை என்பது உள்நாட்டு அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டவையாகவே இருக்கிறது.

இந்தசூழ்நிலையில் தற்போது நாட்டில் உள்ள நிலைமை “இரண்டும் கெட்டான்” நிலைமையாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக உள்ள ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமராகவும் இருக்;கும் அரசாங்கம், “இரட்டை” கொள்கையையே பின்பற்றி வருகிறது.

இதற்கு உதாரணமாக உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் அமரிக்க ஜனாதிபதி, பிரித்தானிய பிரதமர் ஆகியோர் பிரதமருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு  நிலைமையை விசாரித்தனர்.

உடனடியாக அமரிக்க புலனாய்வுப்பிரிவும் பிரி;த்தானிய விசாரணையாளர்களும் இலங்கைக்கு வந்தனர்.

இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.

இலங்கையில் இன்று பாரிய முதலீடுகளைக் கொண்டுள்ள சீனா, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியது.

மேற்கத்தைய நாடுகளுக்கு ஈடாக இலங்கையின் பாதுகாப்பி;ல் தமக்கும் பங்கிருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக காவல்துறையினருக்கு வாகனங்களையும், நிதியளிப்பையும் சீனா வழங்கியது.

அத்துடன் சீன ஜனாதிபதியும் இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டமை போன்ற ஒரு செயற்பாட்டை, இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு சென்றிருந்தபோது காணக்கூடியதாக இருந்தது.
இந்தியா உட்பட்ட சில நாடுகளின் தலைவர்கள்,சீனாவில் அண்மையில் இடம்பெற்ற மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்தனர்.

இதன்போது சீன ஜனாதிபதி இலங்கையின் ஜனாதிபதியை மாத்திரம் விசேடமாக சந்தித்தமை அந்த நாடு இலங்கைக்கு எந்தளவு முக்கியத்துவத்தை வழங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்ளமுடிந்தது.

இந்த சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம். அமரிக்கா, இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, உள்ளிட்ட நாடுகளின் தலையீடுகளை தற்போது பாதுகாப்பு விடயத்தில் உள்வாங்கியுள்ளது.

மறுபுறத்தில் சீனாவின் தலையீட்டையும் வரவழைத்துக்கொண்டது.

எனவே உள்நாட்டு பாதுகாப்பில் வெளிநாடுகளின் தலையீடுகள் இருக்கக்கூடாது என்றுக்கூறி வந்த இலங்கை அரசாங்கம் இந்த நாடுகளின் உதவிகள் இல்லாமல் நகரமுடியாது என்பது வெளிச்சம்.

இந்த விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றபோதே சீனாவின் புலனாய்வாளர்கள் இலங்கையில் சீனாவின் நிர்மாணப்பணிகளுக்கு ஊடாக ஊடுருவியிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகின.

எனினும் அதனை சீனா மறுத்திருந்தது.

இருந்தபோதும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை அடக்க உதவி செய்கிறோம் என்று நாட்டுக்கு வந்துள்ள இந்த சர்வதேச நாடுகள். தமது நலன்களை பாதுகாக்கும் வகையி;ல் திட்டங்களை வகுக்கும் போது அது நிச்சயமாக இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கும்.

இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதிலேதான் அதன் சாணக்கியம் தங்கியிருக்கிறது.

இதில் இலங்கை மக்களை பொறுத்தவரையில் அவர்கள் பார்வையாளர்களாகவே இருக்கமுடியும்.
ஏனைய விடயங்களைப்போன்று இந்த விடயத்தில் அவர்கள்; அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்போவதில்லை.

ஏனெனில் உயி;ர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை வெளிநாடுகளின் புலனாய்வாளர்கள் மூன்கூட்டியே கூறியபோதும் அவற்றை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இலங்கையின் அரசாங்கம் மீதும் புலனாய்வாளர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் நம்பிக்கையை இலங்கை மக்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் வளர்த்துவிட்டிருக்கிறது.

எனவே இடியப்பச் சிக்கலுக்குள் இருக்கும் இலங்கையை மீட்கும் ஆளுமை இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறதா?

எமக்கு பாதுகாப்பு விடயத்தில் உதவிசெய்ய வந்தவர்களை,பணிகள் முடிந்ததும் அரசாங்கம் நன்றிக்கூறி அனுப்பிவைக்கப்போகிறதா?

அல்லது இலங்கை மக்கள் சுயமாக சிந்தித்து, சீன. ரஸ்ய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளப்போகிறார்களா? அல்லது இந்தியா உட்பட்ட மேற்கத்தைய நாடுகளின்; கொள்கைகளை அங்கீகரிக்கப்போகிறார்களா?

அப்படியில்லாமல், இலங்கைக்கென தனியான தேசியக்கொள்கை ஒன்றை தேடிக்கொள்ளப்போகிறார்களா?

இதில் ஒன்றை அடுத்து வரும் ஒரு தேர்தலிலேயே மக்கள் நிச்சயமாக தீர்மானிப்பார்கள் என்பது உறுதி.

கருத்து தெரிவிக்க