உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘4,000 கருத்தடை’ – கைதான வைத்தியரிடம் பலகோணங்களில் விசாரணை! வீடும் முற்றுகை

சிங்கள, பௌத்த பெண்களை இலக்குவைத்து 4 ஆயிரம் கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படும் குருணாகலை வைத்தியசாலையின் மருத்துவரிடம்  பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அத்துடன், அவரின் வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல்துறையினர், தேடுதல் வேட்டையும் நடத்தினர் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தீவிர செயற்பாட்டாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் குறித்த வைத்தியர், தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள, பௌத்த பெண்களை இலக்கு வைத்து இந்த மருத்துவர் 4 ஆயிரம் கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் என வெளியான செய்தியை மேற்கோள்காட்டி ஜே.வி.பியின் தலைவர், அநுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர்கூட அறிந்திருக்கவில்லை என கூறினார்.

இந்நிலையிலேயே தாம் வெளியிட்ட செய்தி உண்மைதான் என்ற தொனியில் குறித்த பத்திரிகை, இன்றும் அது தொடர்பில் மீண்டும் செய்தி பிரசுரித்துள்ளது.  ‘ கருத்தடை சத்திரசிகிச்சை’ தொடர்பில் மருத்துவமனையில் பணியாற்றும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க