உள்நாட்டு செய்திகள்நேர்காணல்கள்மலையகச் செய்திகள்

மலையகத்தில் தலைவர்- தொண்டர்  கோட்பாடு ஒழிக்கப்படவேண்டும்

மலையக பெருந்தோட்டத்துறையில் “தலைவர்”; “தொண்டர்” கொள்கை ஒழிக்கப்படவேண்டும் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

ஊடகனுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது அவர் இதனைக்குறிப்பி;ட்டார்.

தலைவர்-தொண்டர் கோட்பாடு இன்னும் அந்த மக்களை அடிமையாகவே கருதும் நிலையை காட்டுவதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

கேள்வி:
ஆரம்ப காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு கருவியாகவே மலையக மக்களை ஜே.வி.பி கருதியிருந்தது.

இந்த நிலைப்பாட்டில் இருப்பதால் தான் ஜே.வி.பி மலையக தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் பாராமுகமாக இருப்பதாகவும் உங்கள் கட்சி மீது ஓர் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:
இது முற்றிலும் தவறான கருத்து. நாம் தொடர்ச்சியாக மலையக தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் வருகின்றோம். கடந்த ஆண்டு இந்த வேதன உயர்வு போராட்டம் ஆரம்பமாவற்கு முதலே நாம் இந்த பிரச்சினையை பற்றி பேசியிருந்தோம்.

இளைஞர்கள் சமூக ஊடகங்களில் இந்த பிரச்சினை பற்றி பிரசாரங்களை மேற்கொள்ள முன்பே நாங்கள் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினை முழு நாள் விவாதம் ஒன்றை நடத்தியிருந்தோம்.
இந்த வகையில் நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையில் பாராமுகமாக நடந்துகொள்கின்றோம் என்பது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும்.

முட்டிக் காசு தொழிற்சங்கங்களுடன் தோட்டத் தொழிலாளர்கள் இயலாமைமையின் காரணமாக இணைந்திருக்கின்றனர்.

அவர்கள் தோட்ட துரைமார்கள் மற்றும் தலைவர்களுக்கு அடிபணிந்திருக்கின்றனர்.
தலைவர்களே தோட்டத்தினை நிர்வகிக்கின்றனர். அங்கிருந்து விடுபட முடியாமல் அந்த மக்கள் தவிக்கின்றனர்.

அவ்வாறான முட்டுக்கட்டைகள் சில இருப்பதனால் எங்களால் விளிம்பு நிலையிலிருந்து செயற்ட முடியாதுள்ளது.

அந்த தடைகளை தகர்த்தெறிந்து விட்டே முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கின்றது.
நாம் தோட்டப் பகுதிகளுக்கு சென்று மக்களுடன் பேச முற்படும் போது அங்கு தொண்டாவுக்கு ஆதரவான தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருக்கும் போது ஒன்றுமே செய்ய முடியாது.
மக்களும் எங்களுடன் பேச அஞ்சுகின்றனர். இவற்றை மாற்ற வேண்டியது அவசியமாகும்.
அந்த மக்களை நசித்து மிதித்து அடிமையாக அவர்கள் வைத்துள்ளனர். அந்த நிலைமையிலிருந்து மக்களை விடுவிக்கவும் வேண்டும்.

இந்தியத் தலையீடு பற்றிய எமது கட்சியின் நிலைப்பாடு வேறு.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய நிலைப்பாடு வேறு. அதற்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

கட்சியின் 1982 கொள்கைப் பிரகடனத்தில் தேசியப் பிரச்சினை பற்றி தோழர் ரோஹண விஜேவீர எழுதிய நூலில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயமே, இலங்கையில் அதிகளவு நெருக்குதல்களை சந்திக்கும் ஒடுக்கப்பட்ட மக்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர் என்பதாகும்.

எமது நிலைப்பாட்டை விளக்குவதற்கு இந்த ஒரு உதாரணமே போதுமானதாகும்.
இதன்படி இந்திய ஆதிக்கத்திற்கு எதிராக செயற்படுவது என்பது வேறு. தோட்;டத் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடுவது என்பது வேறு.

இந்தியா தற்போது வடக்கில் வீடுகளை நிர்மாணித்து வருகின்றது.

பெருந்தோட்டப் பகுதிகளில் வீடுகளை நிர்மாணித்து வருகின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு அது பயன்மிக்கதாகும்.

ஆனால் இந்தியா பேதமின்றி மற்றைய இன மக்களுக்கும் வீடுகளை அமைக்க உதவி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

வடக்கு மக்களுக்கும், பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா உதவி செய்யும் போது சிங்கள மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது.

ஏன் அவர்கள் தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுகின்றார்கள் என்று
சந்தேகம் சிங்கள மக்களுக்கு ஏற்படுவதை தடுக்க முடியாது.

கேள்வி:
மலையக தமிழ் மக்களின் அரசியலானது கட்சி மற்றும் தொழிற்சங்க அரசியலுக்குள் சிக்கியுள்ளது.

இதனை தேசிய இன அரசியல் என்ற தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்று ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர். இந்த நகர்வு பற்றி ஜே.வி.பியின் கருத்து என்ன?
பதில்:
மலையக தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் நியாயமானது.

ஆனால் அதற்கான தீர்வு மலைநாடு ஒன்றை உருவாக்குவதல்ல.

அப்படியான ஒர் பாதையை இளைஞர்கள் தேர்ந்தெடுத்தால் தோல்வியே ஏற்படும். இந்த விடயத்தில் தான் வடக்கும் தோல்வியை தழுவியது.

வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையில் பிரச்சினைகள் இருந்தன.

மொழிப் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பன இருந்தன.

அனைத்து அரசாங்கங்களும் அந்த ஏற்றத்தாழ்வுகளையும் வேறுபாடுகளையும் பேணி வந்தன

.
இதனால் தான் ஆயுதப் போராட்டமும் விடுதலைப் புலிகள் அமைப்பும் உருவாகின.
தற்கொலைதாரிகள் உருவாகினர்.

அவர்கள் உருவாகவும் நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால் அவர்களின் இறுதி இலக்கான நாட்டைப் பிளவுப்படுத்துவது என்பது தவறான முடிவாகும்.

தனி நாடு என்ற அவர்களின் இலக்கினை இலங்கையில் ஒரு போதும் எய்த முடியாது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான உரிமைகளுக்கான போராட்டம் மலையகத்தில் தனி அரசு ஒன்றை நிறுவுவது வரை தள்ளப்படுமாயின் அதற்கு இதர மக்களின் ஆதரவு கிடைக்காமல் போய் விடும்.

கொழும்பில் இருந்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த போராட்டத்தின் நியாயமான காரணங்களுக்காக ஆதரவு வழங்குகின்றனர்.

ஆனால் தனி மலைநாட்டுக்கான போராட்டமாக இது மாறுமாயின் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவினை அவர்கள் இழக்க நேரிடும்.

அது தவறான ஓர் கருத்தாகும். ஜே.வி.பியும் அதற்கு ஒருபோதும் இணங்காது. பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை வழங்குவது ஒன்று மலைநாடு என்ற தனி நாட்டுப் போராட்டமாக உருவானால் இன மோதல்களே ஏற்படும்.

ஒவ்வொரு அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்துவதாகக் கூறிக் கொண்டு அவர்களின் தலைவர்களையே அதிகம் கவனித்து வந்தன.

மறைந்த தலைவர் தொண்டமான் காலத்திலிருந்து இந்த பழக்கம் தொடர்கின்றது.

தொண்டமானுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் போதும் தோட்டத் தொழிலாளர்களும் கவனிப்புக்குள்ளாவார்கள் என்று அரசாங்கம் கருதுகின்றது.

அவர்களும் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் காட்டி தமக்கு தேவையான சலுகைகளைப் பெறுகின்றனர்.

வடக்கில் யுத்தம் நடைபெறும் போது மலையக மக்களை அந்த யுத்தத்திற்குள் உள்வாங்கும்; முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அதிர்ஷ்;டவசமாக அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

கேள்வி:
மலையக கல்வி நிலையை எடுத்துக்கொண்டால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மட்டத்திலும் மலையக தமிழர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ள நிலையில் மலையகத் தமிழர்களின் கல்வி வசதிகள் மேம்பட ஜே.வி.பியின் திட்டங்கள் என்ன?

பதில்:
எமது தொழிற்சங்கங்கள் ஊடாக இந்த விடயத்தையும் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
தோட்டப் பகுதி பாடசாலைகளில் எமது தொழிற்சங்கங்கள் இயங்கவில்லை.
தோட்டப் பகுதிகளுக்கு வெளியி;லேயே அவை இயங்குகின்றன.

இவற்றினூடாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமே தவிர கல்வி வசதிகளை வழங்குவது என்பது தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டது.
அது அரசின் கடமையாகும்.

அண்மைக்காலத்தில் தோட்டப் பகுதி இளைஞர்கள் கல்வி வாய்ப்புக்களை ஓரளவு பெற்றிருக்கின்றார்கள்.

இதனால் அவர்கள் பிரச்சினைகளை உணர்ந்திருக்கின்றார்கள். அவ்வாறான மாற்று சிந்தனை கொண்ட இளைஞர்கள் எம்முடன் இணைந்துள்ளனர்.

அவர்களினூடாக நாங்கள் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். இங்கு வாழும் மக்கள் முதலில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியோ அவர்களுக்கான உரிமைகள் பற்றியோ போதியளவு விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர்.

தோட்டத்தில் வேலை செய்வதும் லயத்திற்கு திரும்புவதுமாகவே அவர்கள் வாழ்க்கை உள்ளது.
தோட்டப்பகுதியில் உள்ள கோவிலுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்றே நாங்கள் அங்கு சென்றால் அவர்கள் கேட்கின்றார்கள். தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பற்றி அவர்கள் எதுவும் கேட்பதில்லை.

இதன் மூலம் அவர்கள் இருக்கின்ற நிலைமையை உணர முடிகின்றது.
இந்த நிலைமையை மாற்றுவதற்கு கல்வி கற்ற இளைஞர்களினால் தான் முடியும்.
கேள்வி:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி தனித்துப் போட்டியிடுமா? தனித்துப் போட்டியிடுமாயின் மலையக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் நீங்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்ன?

பதில்:
உண்மையில் எங்களுக்கு வடக்கு கிழக்கு தமிழர்கள் மலையக தமிழர்கள் என்ற பேதமில்லை.
அனைவரையும் ஒன்றிணைத்த வேலைத்திட்டத்துடன் கூடியவாறே எங்கள் நடவடிக்கைகள் அமையும். மலையக தோட்டத் தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டே நாம் ஜனாதிபதி தேர்தலுக்கான பயணத்தை முன்னெடுப்போம்.

ஆயினும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டல்ல நாம் இந்த தலையீடுகளை மேற்கொள்கின்றோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவே நாம் இதய சுத்தியுடன் போராடுகின்றோம்.

ஆனால் அரசியல் மாற்றங்கள் இன்றி இவற்றை மேற்கொள்ளவும் முடியாது.
இதனால் தோட்டப் பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வூட்டி அரசியல் தலைவர்களின் பின் அணிதிரளாது தங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு நாம் கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அந்த முயற்சிகள் பலனளிக்கா விடின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுவோம்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் 20வது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு எமக்கு ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளது.

1978ம் ஆண்டு முதல் அவர்கள் அந்த நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவர்கள் தெளிவுப்படுத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு இணக்கம் தெரிவித்தது.

ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி என்ற ரீதியில் அவர்கள் இணக்கப்பாட்டிற்கு வர தயங்குகின்றனர்.

மாகாணசபை முறை மற்றும் தேர்தல் முறை என்பன தொடர்பில் சில பிரச்சினைகள் இருப்பதனால் இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது என்று மகிந்த தரப்பு குறிப்பிட்டது.

இவற்றையெலாம் நோக்கும் போது எமக்கு தெரிகின்ற விடயம் என்னவென்றால் எல்லோரும் விருப்பம் விருப்பம் என்று கூறினாலும் இவ்விடயத்தில் உடன்படுவதில் அவர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை சிறுபான்மை மக்களுக்கு சாதகமானது என்று ஓர் தவறான கருத்து உள்ளது.

இந்த கருத்து முற்றிலும் தவறானது. யுத்தம் ஏற்பட்டதும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையினால் தான். இந்த யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்தனர்.

இத்தனை ஆண்டுகள் நாட்டில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கும் பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கும் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

இந்த ஆயிரம் ரூபா போராட்டத்தில் இறுதியில் ஜனாதிபதியுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்மானம் எதனையும் எடுத்தாரா? தர்கா நகர், கண்டி, திகன பகுதிகளில் இனவாத சம்பவங்கள் இடம் பெற்ற போது ஜனாதிபதி பார்த்துக் கொண்டு தானே இருந்தார்.

ஆனால் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு தரப்பினருக்கு அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்கு இந்த முறை சாதகமாக உள்ளது.

அவர்கள் எப்பொழுதும் பெருந்தோட்டத் தொழிலாளர்களைக் காட்டி காட்டி தமது கட்சிக்கும் தரப்பினருக்கும் நன்மைகளை இந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையினூடாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

எனவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதனூடகவே சிறுபான்மையினர் தமது உண்மையான உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கருத்து தெரிவிக்க