நேர்காணல்கள்புதியவைமலையகச் செய்திகள்

தோட்டத்தொழிலாளர்களை அனைத்து அரசியல்வாதிகளும் ஏமாற்றுகின்றனர்- சிறிதுங்க ஜெயசூரிய

“மலையக தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வுக்காக இளைஞர்களின் எழுச்சியை மிகச்;சிறந்த ஓர் போராட்டமாகவே நான் காண்கின்றேன்”
இந்த போராட்டம் சரியான பாதையில் வழி நடத்திச் செல்லப்படவேண்டும்.
அது உரியமுறையில் வழிநடத்திச்செல்லப்பட்டால், அது அரேபிய வசந்தம் போன்றதொரு அரசியல் மாற்றத்தை இலங்கையில் உருவாக்கும் என்று ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
ஊடகன் செய்தித்தாளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.
200 ஆண்டுகள் மிகவும் மோசமானதொரு வாழ்க்கையை வாழும், தோட்டத் தொழிலாளர்களின் இந்த அவல நிலைக்கு மலையக அரசியல் தலைவர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகன்- ஓர் சிரேஷ்ட மாக்ஷியவாதியான நீங்கள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வுப்போராட்டத்தை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
சிறிதுங்க- தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வுப்  போராட்டமானது தொழிற்சங்க தலைவர்களினால் உருவாக்கப்பட்டதல்ல.
இந்த போராட்டம் தோட்டத் தொழிலாளர்களின் கீழ் மட்;டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒற்றுமையின்; அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் வெற்றியடையும் வரை எங்கள் பங்களிப்பும் தொடரும்.
அந்த மக்கள் மத்தியில் உள்ள பிணைப்பினை பலப்படுத்தி வளப்படுத்தி போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதனையே நாம் விரும்புகின்றோம்;.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றுவது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும்.
அவர்களுக்கு ஆயிரம் ரூபாவை கொடுத்து விட்டு அமைதிப்படுத்தி விட முடியாது.
அவர்களை சாதாரண பிரஜைகளாக மாற்றும் பெரிய சவால் உள்ளது.
எனினும் கட்சிகளை மாற்றவும், அமைச்சுப் பதவிகளை எடுக்கவும் மாத்திரமே அவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தோட்டப்பகுதி மக்களின் முழு வாழ்க்கை முறையையும் மாற்றத்திற்குட்படுத்த போராட வேண்டியுள்ளது.
இந்த போராட்டத்தினை எம்மைப் போன்ற மாக்சியவாதிகளினால் தான் சுயநலமின்றி முன்னெடுக்க முடியும்.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
உழைக்கும் வர்க்கமாக மிகவும் வறுமையான  ஓர் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கைக்கு அந்நிய செலாவணியினை ஈட்டித் தருவதில் பெரும் பங்களிப்பு செய்யும் இவர்கள்  அதற்காக தங்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் தியாகம் செய்து வருகின்றனர்.
எனினும் அவர்களின் வாழ்க்கை முறை, வசிக்கும் லய்ன்;கள், அடிப்படை வசதிகள் என்பன மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளன.
தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இங்கு  வந்து 200 ஆண்டுகளாகின்றன.
ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையை  வேறு பாதையில் திருப்புவதற்கோ சற்று முன்னோக்கி நகர்த்தவோ அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளினால் முடியாது போய் விட்டது.
மலையக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் தோட்;டத் தொழிலாளர்களைப் பற்றி பேசுகின்றனர்.
அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக பல்வேறு  பொய் வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.
ஆனால் மலையக மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.
இன்று தோட்டப் பகுதி மக்களின் போராட்டங்களைப் பார்க்கும் போது அவர்களில் ஒரு பெரும்  மாற்றத்தினைக் காண முடிகின்றது.
தோட்ட முதலாளிகள் மற்றும் தொழிற்சங்க  தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும்  தலைவர்களினூடாக தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்று பிணைத்து வைத்திருக்கின்ற நிலைமை இன்று ஓரளவு கேள்விக்குட்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள இளைஞர்கள் இந்த யதார்த்த நிலைமையைப் புரிந்து கொண்டுள்ளனர்.
தலைவர்களின் பேச்சைக் கேட்டால் தமக்கு எதிர்காலம் இல்லை என்று அவர்கள் உணர தொடங்கியுள்ளனர்.
இதனால் அவர்கள் ஒன்றுப்பட்டு போராட வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இதனால் தான் தொண்டமான், வடிவேல் சுரேஷ் போன்றோர் தோட்ட முதலாளிகளுடன் இணைந்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போதிலும் தோட்டத் தொழிலாள மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
மலையகத்தில் இந்த நிலைமை இதற்கு முன்பு இருக்கவில்லை
.
வழமையாக முன்பு அவர்கள் ஆர்;ப்பாட்டம் செய்வார்கள்.
பின்னர் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
அதன் பின் அந்த மக்கள் அமைதியாகி வேலைக்கு திரும்பி விடுவர்.
இன்று அந்த நிலைமை இல்லை.
ஆனால் இன்று அவர்கள் உரிய வேதனம்; கிடைக்கும் வரை போராடுவோம் என்று கூறுகின்றனர். இது ஒரு பெரும் மாற்றமாகும்.
எம்மைப் போன்ற மாக்சியவாதிகள், உண்மையில் இந்த தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே உழைக்கும் வர்க்கத்தினராக கருதுகிறோம்.
நகரமய தொழிலாளர்கள் ஓரளவுக்கு சிறியளவிலான குட்டி முதலாளித்துவ பிணைப்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அவர்களில் சிலருக்கு சொந்த வீடுகள் இருக்கும். அல்லது கடைகள் இருக்கும்.
வேறு வருமான வழிவகைகள் இருக்கும்;.
ஆனால் மலையக தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கிடைக்கின்ற பணத்தில் வாழ்கின்றனர்.
எனவே எம்மைப் பொறுத்தவரையில் இவர்களே உண்மையான தொழிலாளர் வர்க்கமாகும்.
சுமார் 200 ஆண்டுகளாக லய்ன்;களில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவேயில்லை. அவர்களின் உடல் வளர்ச்சியைப் பார்த்தால் குறிப்பாக பெண்களை மிகவும் குறுகிய நறுங்கிய உடல் அமைப்பினைக் கொண்டவர்களாக உள்ளனர்.
மற்றைய பகுதி மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலையக தோட்டத் தொழிலாள மக்களின் உடல் அளவு மிகவும் சிறியதாகவும் வளர்ச்சி குன்றியதாகவும் உள்ளது.
சிறிய லய்ன்களில் அடைப்பட்டு வாழ்ந்து  வளர்ந்து அவர்கள் உடல் அமைப்பே மாறி விட்டது.
ஆடு மாடுகளை அடைப்பது போன்று சிறிய இடங்களில் அவர்களை அடைத்து வைத்து  அவர்கள் இந்த நிலைமையை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.
இது எவ்வளவு வேதனைக்குரிய விடயம்.
தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து விட்டு வந்து லய்ன்களில்; அடைப்பட்டு வசிக்கின்றனர்.
இந்த நிலைமையை உடைத்தெறிய வேண்டும்.
அவர்களை லயன் வாழ்க்கையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
அவர்களுக்கு மாதாந்த வேதனம் வழங்க வேண்டும். மற்றைய முன்னேறிய தொழிலாளர் வர்க்கத்தினரைப் போன்ற நிலைமைக்கு அவர்களை கொண்டு வர வேண்டும்.
ஊடகன்- ஏன் ஆயிரம் ரூபா? நீங்கள் குறிப்பிட்டது போன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதனம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுக்கலாம் அல்லவா?
சிறிதுங்க- உண்மையில் இதுவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் நின்று விடுகின்றது.
ஆனால் முதல் முறையாக தோட்டத் தொழிலாளர்கள் ஓர் அடியை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளனர்.
தலைவர்கள் சொல்வதனைக் கேட்காமல் இந்த பேராட்டத்தினை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.
இந்த நிலையில் ஒரேயடியாக எமது இறுதி இலக்கினை ஓர் ஆரம்பிக்கக் கோரிக்கையாக முன்வைக்க முடியாது.
அதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனூடாக தோட்டத் தொழிலாளர்கள் தமது உண்மையாக நண்பர்கள் யார் எதிரிகள் யார்  என்ற உண்மையை புரிந்து கொள்வார்கள்.
இப்பொழுது பாருங்கள். தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு கடிதங்கள் விநியோகிக்கப்படுகின்றனவா?
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அவர்கள் கடிதங்களை எடுக்க வேண்டும்.
இந்த ஆரம்ப உரிமைக் கூட இன்றி அவர்கள் உள்ளனர்.
அந்தளவுக்கு அவர்களை மிகவும் கீழ் மட்டத்தில் வைத்துள்ளனர்.
தோட்டத் தலைவர்கள் மட்டுமல்ல. தொழிற்சங்க தலைவர்கள், தொண்டமான, வடிவேல் சுரேஷ் உட்பட பலரும் இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களும் இதற்கு உடந்தையாக உள்;ளனர்.
அனைவரும் வீரர்கள் போன்று கொழும்பில் இருந்து கதைக்கின்றனர்.
திகாம்பரம், ராதாகிருஷ்ணன், மனோ கணேசன் அனைவரும் பேசுகின்றனர்.
அவர்களுக்கு தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய அக்கறை இல்லை. தமது அதிகாரத்தை எப்படி தக்க வைத்துக் கொள்வதே அவர்களுக்கு பிரச்சினை.
இதனால் குறுகிய மனப்பான்மையுடன் பிரச்சினையை நோக்காமல் தோட்டத் தொழிலாளர்கள் என்ற விசேட பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற மற்ற மக்களில் இருந்து வேறுப்படுத்தப்பட்டு வாழும் இந்த மக்களை சாதாரண பிரஜைகளாக மாற்றும் அளவுக்கு நாம் முன்னோக்கி இந்த போராட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும்.
அவர்களை தோட்டப் பகுதிக்குள் முடக்கி வைப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.
இதற்கான போராட்டமே அவசியமாகும். அதற்கான ஆரம்பமாகவே வேதன உயர்வுப்போராட்டம் அமைந்துள்ளது.
ஊடகன்- மாக்சியம் பற்றிய போதிய புரிதலைக் கொண்டுள்ள நீங்கள் இந்த போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதன் அவசியம் தன்மையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்? போராட்டம் வெற்றி என்ற இலக்கினை அடையுமா?
சிறிதுங்க- அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை நாடாளுமன்றத்தில்  நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்து உரையாற்றும் போது மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப்  பேசித் தீர்க்க நடடிவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தளவுக்கு அவர்களின் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
அதேபோல் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்றார்.
அதேபோல் மகிந்த ராஜபக்சவும் ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்கின்றார்.
கொழும்பில் உள்ள அரசியல் தலைவர்கள் இந்த பிரச்சினையைப் பற்றி பேசும் அளவுக்கு பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
இதனால் தான் நான் கூறுகின்றேன் நாம் வெற்றியை நோக்கிப்  பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால்  எல்லாம் பேச்சளவில் மட்டுமே உள்ளனர். அது ஏன்? மகிந்த ராஜபக்சவாகட்டும், ரணில் விக்கிரமசிங்கவாகட்டும், சஜித் பிரேமதாசாவாகட்டும் தொண்டமானாகட்டும் அவர்களுக்கு தோட்டத் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள் அல்லர்.
அவர்களுக்கு தேயிலைத் தோட்ட முதலாளிகளே முக்கியமானவர்கள்.
முதலாளித்துவ முறையை பாதுகாக்கும் ஓர் குழுவாகவே இவர்கள் அனைவரும் செயற்படுகின்றனர்.
இதனால் தான் அவர்கள் தோட்டத் தொழிலாளர்களை அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான ஓர் கருவியாக பயன்படுத்துகின்றனர்.
இதனால் தோட்டத் தொழிலாளர்கள் தமது உண்மையான நண்பர்கள் இந்நாட்டைச் சேர்ந்த ஏனைய தொழிலாளர் வர்க்கம் என்பதனை புரிந்து கொள்வது அவசியம்.
அவர்கள் நகர மய தொழிலாளர்களுடன் கரம் கோர்த்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
அப்போதே  இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றி அளிக்கும் என்று உறுதியாகக் கூற முடியும்.
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் தலைநகர் கொழும்பினை மையமாகக் கொண்டு இயங்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.
ஊடக அறிக்கைகளையும், சுவரொட்டிகளையும் வெளியிடுவது மட்டுமன்றி அவர்களின் போராட்டத்திற்காக நாம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.
ஊடகன்- முன்னெப்போதுமில்லாத அளவு இந்த போராட்டத்தில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பை,  நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்?
சிறிதுங்க- இதுவரை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமானது தொழிற்சங்கவாதிகள் மற்றும் தோட்டத்தில் உள்ள தலைவர்கள் என்ற ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்று தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்த அனைத்து தடங்கல்களுக்கும் மத்தியில் அவர்களின் புதிய தலைமுறை ஒப்பீட்டளவில்  கல்வி கற்றவர்களாக உள்ளனர்.
கல்வியைப் பெறுகின்ற எந்தவொரு சமுதாயத்தினதும் சிந்தனைகள் வாழ்க்கை முறைகள் என்பன மாற ஆரம்பிக்கின்றன.
அந்த புதிய தலைமுறை பெறுகின்ற கல்வியினூடாக அவர்கள் சிந்தனை மாற்றத்தினைப் பெற்றுள்ளனர்.
அவர்கள் இந்த அடிமை வாழ்க்கை பற்றி சிந்திக்க ஆரம்பித்ததன் காரணமாக தலைவர்களினால் போராட்டத்தை முடுக்கி விடவும், நிறுத்தி விடவும் முடியாதுள்ளது.
எனவே இந்த போராட்டம் ஓர் அலையாக தோட்டப் பகுதி முழுவதும் பரவி வருகின்றது.
இந்த போராட்டம் வெற்றிகரமாக முன்னோக்கி நகருமாயின் முழு நாட்டினதும் அரசியலில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்றே நான் கருதுகின்றேன்.
இது சிறப்பான இளைஞர் எழுச்சியாகும்.   தொழிலாளர் வர்க்கமாக அவர்கள் சிந்தித்து செயற்பட ஆரம்பித்தால் முழு நாட்டினதும் எதிர்காலத்திற்கான சிறந்த ஓர் பயணமாக அது அமையும் என்றே நான் கருதுகின்றேன்.
ஊடகன்- இந்த போராட்டத்தை முழு நாட்டில் விஸ்தரிப்பதனூடாக  அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்று கூறினீர்கள்?
சிறிதுங்க- தோட்டத் தொழிலாளர்கள் எமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் முதுகெலும்புகள்.
மற்றைய பகுதிகளில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் ஒவ்வொரு பகுதிகளிலும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
துறைமுக தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர் அளவில் உள்ளனர்.
மற்றைய தொழிலாளர்கள் ஒவ்வொரு பகுதிகளில் ஆயிரம், ஐந்நூறு என்றளவில் பரவியிருக்கின்றனர்.
ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவ்வாறில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேசம் முழுவதும் 50 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் அவர்கள் ஒன்றுப்பட்ட சக்தியாக திகழ்கின்றனர்
.
இதன்காரணமாகவே முதலாளித்துவ அரசியல் அவர்களை பிரித்தாளுகின்றது.
எனவே தான் அவர்களின்  முழு வீச்சுடனான தொழிங்சங்க ரீதியிலான செயற்பாடுகளினூடாக பிரயோகிக்கப்படும் எந்தவொரு  அழுத்தமும் நாட்டின் பல்வேறு   விடயங்களில் அழுத்தம் செலுத்தக் கூடியதாகும்.
இந்த அழுத்தம் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது.
நாட்டில்  அந்நிய செலாவணியைப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தமுடியும்.
இதனூடாக தொழிலாளர் வர்க்கத்திற்கு சாதகமான  எவ்வளவோ விடயங்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை மென்மேலும் முன்னோக்கி நகர்த்தி நாட்டின் அரசியல் மாற்றத்திற்கும் வித்திட முடியும்.
இன்று நாடு முழுவதும் பரவியுள்ள தொழிலாளர் வர்க்கம் குறிப்பாக நகர மய தொழிலாளர் வர்க்கத்தினருக்கு தங்களது போராட்டங்கள் குறித்து  சந்தேக நிலையே  தோன்றியுள்ளது.
ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் இந்த போராட்டமானது தோட்டப்பகுதிகளுக்குள் மட்டும் வரையறுக்கப்படவில்லை.
தலவாக்கலை நகரம், லிந்துலை நகரம், கொட்டகல நகரம் ஆகிய நகரங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.  அந்த பகுதிகளில் உள்ள சிறிய வர்த்தகர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
அதனால் இந்த கோரிக்கையானது முழு சமூகத்தினதும் கோரிக்கையாக உள்ளது.
இந்த கோரிக்கையை வென்றெடுத்தால் அனைத்து பிரதேசங்களுக்கும் இந்த போராட்டம் பரவும்.
அரேபிய வசந்தம் போன்றதொரு நிலை உருவாகும்.
இதனால் தான் நகரமய தொழிலாளர் வர்க்கம் தோட்டத் தொழிலாளர்களுடன் கரம் கோர்த்து செயற்பட வேண்டும் என்று கூறுகின்றேன்.
அவர்களை தனிமைப்படுத்தி விடக் கூடாது. அத்துடன் வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நின்று விடாது
உங்களது போராட்டத்திற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்ற நிலைப்பாட்டிற்கு தென்னிலங்கை தொழிற்சங்கத்தினராகிய நாம் வர வேண்டும்.
இதற்காக கொழும்பில் உள்ள தொழிலாளர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவினை வழங்கும் முகமாக ஒரு மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கலாம்.
இலங்கையில் இவ்வாறான நிலைமை இதற்கு முன்பும் இருந்தது. 1980 வேலை நிறுத்தப் போராட்ட காலத்தில் அனைத்து தொழிலாளர்கள் மத்தியிலும் வியப்பூட்டும் வகையிலான ஓர் பிணைப்பும் ஒற்றுமையும்  காணப்பட்டது.
ஆனால் இன்றோ  அந்த ஒற்றுமை தன்மையை காணக் கிடைக்கவில்லை.
இன்று ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தால் ரயிலில் பயணிக்கின்ற ஆசியர்கள், துறைமுக ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் அனைவரும் அவர்களை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
இந்த நிலைமை 1980களின் முன்னர் இருக்கவில்லை.
இதனால் தான் நான் கூறுகின்றேன் தோட்டத் தொழிலாளர்களின் இந்த போராட்டத்தில் ஏனைய தொழிலாளர்கள் ஒன்றிணைதல் வேண்டும்.
இந்த போராட்டம் கூட்டு முயற்சியாக வெற்றி பெறுமாயின் அதனால் ஏற்படும் அழுத்தமானது இன்று எமது நாட்டின் அனைத்து தொழிலாளர் வர்க்கம் பலவீனமான நிலையிலிருந்தும் வீழ்ச்சியடைந்துள்ள மனநிலையிலிருந்தும் மீண்டு வர பெரும் பங்களிப்பு செய்யும்
ஊடகன்- ஆனால் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்த கூட்டு ஒத்துழைப்பு தன்மையை தென்னிலங்கையிலிருந்து  காணக்  கிட்டவில்லை அல்லவா? ஏனெனில் உங்களது தொழிற்சங்கம் அண்மையில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கும் அடையாள வேலை நிறுத்தம் ஒன்று தொடர்பில் அறைகூவல் விடுத்திருந்தது. அதற்கான போதிய வரவேற்பு கிடைக்கவில்லை அல்லவா?
சிறிதுங்க- நான் முன்னர் கூறியது போன்று தென்னிலங்கையில் தொழிற்சங்கங்கள் அரசியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட தயங்கி வருகின்றன.
வரவு செலவுத் திட்டம் ஒன்றை கடந்த வாரம்  அரசாங்கம் சமர்;ப்பித்திருந்தது.
இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் இந்தநாட்டின் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை அல்லவா?
ஆனால் சுமார் 15, 20 ஆண்டுகளுக்கு முன்னர், வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் போது தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கலந்துரையாடி வேதன உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் முறை இருந்தது.
இன்று தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் மட்டத்தினருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளன.
தொழிற்சங்கங்கள் பிரிந்து போயுள்ளன.
முன்னர், தொழிற்சங்க ஒன்றிணைந்த சபை என்ற ஓர் அமைப்பு காணப்பட்டது.
அதில் தொழிற்சங்கவாதிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.
கட்சி பேதங்களின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் செயற்பட்டாலும் தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொழிலாளர்களின் உரிமைகள், கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்தனர்.
இன்று அவ்வாறானதொரு நிறுவனம் இல்லை. மே தினத்தில் மட்டுமே தொழிற்சங்கவாதிகள் ஒன்றிணைகின்றனர். அடுத்த நாள் பிரிந்து சென்று விடுகின்றனர்.
இதன்படி ஓர் இயக்கமாக கட்சியாக நாம் எமது பிரதான கோஷமாக தொழிற்சங்க தலைவர்கள் அடங்கிய ஒன்றிணைந்த சபையொன்று நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம்.
இந்த சபை மாதாந்தம் அல்லது வாராந்தம் ஒன்றுகூடி நாட்டில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய ஒன்றிணைய வேண்டும்.
இதில் தொழிலாளர்கள் தொடர்பில் பொது தீர்மானங்களை எடுக்க வேண்டும். எமது நாட்டில் இன்று தொழிற்சங்க இயக்கம் என்ற ஒன்றில்லை.
ஆனால் தொழிற்சங்கங்கள் பல உள்ளன.
1980 வேலை நிறுத்தப் போராட்டம் தோல்வியுற்ற பின்னர் அத் தோல்வியிலிருந்து எம்மால் மீண்டெழ முடியாதுள்ளது.
ஜே.ஆர்.ஜெயவர்தனா 1980 வேலைநிறுத்தப் போராட்டத்தை அடக்கி 80 ஆயிரம் அளவிலான அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்து புதியவர்களை பணிக்கு அமர்த்திய நடைமுறையினூடாக தொழிற்சங்கங்கள் பலவீனமாகிட்டன.
ஊடகன்- தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பு பற்றி பேசும் போது அவர்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கு இந்தியா போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்தியாவின் தலையீடு பற்றி உங்கள் கருத்து என்ன?
சிறிதுங்க-இங்கு ஒரு உதாரணத்தை கூற விரும்புகின்றேன். மலையக அரசியல் தலைவர்கள் எந்தளவுக்கு அந்த மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதற்கு நான் ஒரு உதாரணம் கூற விரும்புகின்றேன்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அவருக்கு நாடாளுமன்றத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர் மலையகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இதனை மலையக அரசியல் தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தோட்டப் பகுதி மக்கள் பெருமளவில் மோடியை காண்பதற்கு திரண்டிருந்தனர்.
மோடி இந்தியாவில் இந்து பேரினவாதத்தின் பேரில் தமிழ் நாட்டின் மீது பெரும் அழுத்தத்தினை மேற்கொள்பவர்.
எனினும் மோடியினால் இதுவரை தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை.
தமிழ் நாட்டு மக்கள் மோடியை நிராகரிக்கின்றனர். அவர்களின் அரசியலை நிராகரிக்கின்றனர்.
அவ்வாறான ஒருவரை தமிழ் நாட்டிற்கு மேலாக புதுடில்லியிலிருந்து அழைத்து வந்து தோட்டத் தொழிலாளர் மக்களை வணங்க வைக்கின்றனர்.
இது ஒரு மோசமான செயலாகும்.
தமிழ் நாட்டு மக்களுடன் மலையக தோட்டத் தொழிலாள மக்களுக்கு பௌதீக, மத, கலாசார மொழி ரீதியிலான பிணைப்பு இருக்கின்றது. ஆனால் அவ்வாறானதொரு பிணைப்பு மோடியுடன் இல்லை.
மோடி தமிழ்நாட்டு மக்களுக்கும், தோட்டத் தொழிலாள மக்களுக்கும் எதிரானவர்.
மலையக தோட்டத் தொழிலாள மக்கள் தமிழ் நாட்டு தோட்ட தொழிலாளர் மக்களுடன் கரம் கோர்த்து ஒன்றுப்பட்டு செயற்பட வேண்டும்.
அவ்வாறான நிலையில் தான் நாமும் முன்னோக்கி செல்ல முடியும்.
ஆனால் மலையக தோட்டத் தொழிலாளர்களும், வடக்கு கிழக்கு மக்களும் இந்தியா தான் தங்கள் பாதுகாவலன் என்று கருதிக் கொண்டு செயற்படுகின்றனர்.
அது தவறு. உண்மையில் இந்திய தொழிலாள வர்க்கம் தான் எங்கள் உண்மையான நண்பர்கள்.
இந்தியாவில் தொழிலாள வர்க்கம் மிகவும் பலமான நிலையில் உள்ளது. மாறாக மோடியோ, ராகுல் காந்தியோ வந்து எங்களுக்கு உதவுவார்கள் என்று கருதுவது தவறு.
இலங்கையில் பொதுவாக தமிழ் மக்களின் அரசியலை எடுத்துக் கொண்டால் அமிர்தலிங்கம், செல்வநாயம் உட்பட தற்போது உள்ள சம்பந்தன் வரை இந்தியா மீது பெரும் நம்பிக்கையை வைத்துள்ளனர்.
அவர்கள் எப்பொழுதும் இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியா எதுவுமே செய்வதில்லை. இந்தியா பிரபாகரனைக் கொல்லவும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும் உதவி செய்தது.
இந்தியாவின் உதவியின்றி இந்த யுத்தத்தை இலங்கை வென்றிருக்காது.
பிரதான கடல் ஊடாக யுத்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
செய்மதிகளினூடாக தகவல்களை வழங்கியதும் அவர்கள்  தான். இந்தியாவும், மேற்கத்தேய நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் உதவிக்கு வருவார்கள் என்று காப்பாற்றுவார்கள் என்று கருதுகின்றார்கள்.
இது முற்றிலும் தவறானது.
இந்தியாவின் பொது மக்களும், உழைக்கும் வர்க்கமுமே எமது உண்மையான நண்பர்கள்.
இவ்வாறு கருதி செயற்பட்டால் மட்டுமே எம்மைப் போன்ற சிறிய நாட்டிற்கு எதிர்காலம் இருக்கும்.
ஊடகன்- இந்த போராட்டத்தினை முழு வீச்சுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு உங்கள் கருத்தின்படி மாக்சிய கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமான சக்தியாக இருக்கின்றது.   ஐக்கிய சோசலிச கட்சி இந்த பணியினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கின்றது?
சிறிதுங்க- நாம் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கி வருகின்றோம்.
பல்வேறு மலையக பகுதிகளுக்கு சென்று நாம்  போராட்டம் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
துண்டுபிரசுரங்களை விநியோகித்து  அவர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றோம்.
ஆனால் மாக்சியவாதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் எங்களை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.
இது தென்னிலங்கை தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தியிலும் காணப்படும் பிரச்சினையாகும்.
உங்களுடன்  சேர்ந்தால் எங்களுக்கு நன்மை கிடைக்கும்? இதனால் எங்களுக்கு கிடைக்கப் போகும் ஆதாயம் என்ன என்று அவர்கள் கேட்கும் அளவுக்கு இந்த முதலாளித்துவ அமைப்பு அவர்களின் சிந்தனைகளை மாற்றி வைத்துள்ளன.
எங்களால் சிந்தனைகளில் மாற்றத்தினை மட்டுமே ஏற்படுத்த முடியும்.
சலுகை அரசியலை நடத்த முடியாது.
இந்த முதலாளித்துவ அமைப்பினை பாதுகாப்பதற்கு பணத்தை செலவிடுபவர்கள் உள்ளனர்.
அந்த அடிமை சிந்தனையை ஊக்குவிக்கின்றதற்கு ஊடகங்கள் உள்ளன.
இதனால் இந்த பயணம் இலகுவானதொன்றல்ல. ஆனால் மக்கள் மனதில் ஒரு நாள் மாற்றம் வரும். அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் போன்று அமைதியாகவே இருப்பர்.
ஆனால் அவர்கள் வீதிக்கு இறங்கி போராட ஆரம்பிப்பர். அந்த போராட்டத்தில் முதன்மை இடத்தினை வகிப்பவர்களாக நிச்சயமாக தோட்டத் தொழிலாளர்களே இருப்பர்.
200 ஆண்;டுகளாக அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கையைப் பாருங்கள். சந்ததி சந்ததிகளாக அவர்கள் ஒரே இடத்தில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
கழிவு நீர் வெளியேற இடமில்லை. ஒழுங்கான மலசலகூட வசதிகள் இல்லை. தோட்டத்திற்கு செல்வதும் பின்னர் வீடு திரும்புவதும் அவர்களின் வாழ்க்கையாக உள்ளது.
நாட்டில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் எந்தவிதமான பொழுதுபோக்குகளும்  வேறு வாழ்க்கையும் அவர்களுக்கு இல்லை.
ஏன் நாங்கள் இப்படி வாழ வேண்டும் என்ற சிந்தனை அவர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது. இது தான் பாரிய வெற்றி.
இந்த மக்களை ஏன் தோட்டப் பகுதிக்குள் மட்டும் சிறைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
அவர்களும் மற்ற தொழிலாளர்களைப் போன்று மோட்டார் சைக்கிளில் வந்து வாகனங்களில் வந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து விட்டு  ஏன் வீடு திரும்ப முடியாது?
அவர்களுக்கு வசதியான வீடுகளை ஏன் வழங்க முடியாது? தற்போது இளம் சந்ததியினர் கல்வி கற்று வேறு பணிகளுக்கு செல்வதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
இதனால் இவர்களின் கோரிக்கை எதிர்காலத்தில் ஆயிரத்திலிருந்து 2 ஆயிரமாகவும் அதிகரிக்கக் கூடும்.
நாளாந்தம் 2 ஆயிரம் தருகின்றோம் என்று தோட்ட முதலாளிகள் கூறும் நிலையும் ஏற்படக் கூடும்.
தோட்ட முதலாளிகள் உழைக்கும் வருவாய் அளப்பரியது. தோட்ட அதிகாரிகளும் இன்றும் குட்டி மன்னர்கள் போன்று தானே வாழ்கின்றனர்.
அவர்களுக்கு தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக உள்ளனர்.
அவ்வாறாயின் அவர்களுக்கு எந்தளவுக்கு இலாபம் கிடைக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்க முடியும்.
தோட்டங்களை அவர்களால் நிர்வகிக்க முடியாதுவிடின் அரசாங்கத்திற்கு அவற்றை வழங்கி விடுங்கள் என்றே நாம் கூறுகின்றோம்.
ஆனால் இவ்வாறான மாற்றங்களையோ தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றத்தையோ இந்த முதலாளித்துவ தலைவர்கள் ஒருபோதும்  ஏற்படுத்தப் போவதில்லை.
ஆனால் எம்மைப் போன்ற மாக்சியவாதிகளினால் மட்டுமே இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
ஊடகனின் கருத்துப்பதிவு
ஊடகனை பொறுத்தவரையில் சோசலிச தலைவர்களின் யதார்த்தமற்ற செயற்பாடுகள் காரணமாகவே முதலாளித்துவ தரப்பினர் முன்னிலைப்பெற்றனர்.
இந்தநிலையில், ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரியவின் கருத்துக்கள் யோசனைகள் தொடர்பில் “ஊடகன்” பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறது.

கருத்து தெரிவிக்க