இலங்கையின் அரசாங்கம் தொடர்ந்தும் பகுத்தறிவற்ற, முரண்பாடான கொள்கையை கடைப்பிடித்தால் அதற்காக அதிக விலையைக் கொடுக்கவேண்டியேற்படும் என்று உலகத் தமிழர் பேரவை எச்சரித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வை முன்னிட்டு பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு இலங்கையில் திட்டமிட்ட அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டது.
வைத்தியசாலைகள் மீது குண்டுகளை வீசியும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியும் 40ஆயிரம் முதல் 70ஆயிரம் வரையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
போரின் போதும் போர் முடிந்த பின்னரும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.
30 வருடப்போரில் இரண்டு லட்சம் தமிழர்கள் உயிரிழந்தனர்.
60ஆயிரம் பேர்வரை காணாமல் ஆக்கப்பட்டனர்.
90ஆயிரம் பெண்கள் தமது கணவர்மாரை இழந்தனர்.
4ஆயிரம் சிறுவர்கள் தாய் தந்தையரை இழந்தனர்.
நீண்டகால அடிப்படையில் தமிழர்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் என்பன பின்னடிக்கப்பட்டன.
காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பலரும் இன்றும் ஏங்கிநிற்கின்றனர்.
இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கான ஆரம்பக்காரணத்தை சரிசெய்யும்போதே இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தமுடியும்.
2009ஆம் ஆண்டு போர் முடிந்தபின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு பிரச்சனைக்கு தீர்வைக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது.
எனினும் அப்போதைய அரசாங்கம் தமது அதிகாரத்துவத்தை நிலைநாட்டியதே தவிர, மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வைக்காண முன்வரவில்லை.
அரசியலமைப்பு திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை.
இன்று போர் முடிவடைந்து 10ஆண்டுகள் கடந்துவிட்டன.
இன்னும் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. உண்மையை கண்டறியும் பொறிமுறை மேற்கொள்ளப்படவில்லை. குற்றவாளிகள் தண்டணைக்கு உட்படுத்தப்படவில்லை.
குற்றவாளிகளை தண்டித்து நீதியை வழங்கும் வகையி;ல் நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை
அதிகாரப்பகிர்வு இன்னும் சிங்கள தேசியவாதிகளின் பணயக்கைதியாக உள்ளது.
கல்வியில் பொருளாதாரத்தில் வெற்றியடைந்திருந்த வடக்குகிழக்கு பிரதேசங்கள் இன்று ஏற்றுக்கொள்ளமுடியாத அளவில் கீழ் மட்டத்துக்கு சென்றுள்ளன.
இதற்கிடையில் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் சிக்கலானவை என்றபோதும் ஒரு சமூகம் ஓரங்கட்டப்படும்போது அதற்குள் தீவிரவாத சக்திகள் உள்வாங்கப்படுவதை தடுக்கமுடியாது.
எனவே இலங்கையில் இன்று அவசரமாக, நிலையான முடிவுகள் அவசியமாகியுள்ளன.
போரின் பின்னர் இலங்கையால், உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த இயலவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
எனவே விடாப்பிடியான கொள்கைகளை விட்டு நிலையான தீர்வை முன்னோக்கி நகரவேண்டும்.
இல்லையேல் இலங்கை இன்னும் அதிக விலைகளை கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் உலகத்தமிழர் பேரவை எச்சரித்துள்ளது.
கருத்து தெரிவிக்க