Uncategorizedபண்பாடு

அருகிப்போகும் மலையக கலாசாரம்

திருவிழாக்கள், பதுளைப் பகுதிகளில் யூன் முதல் செப்டம்பர் வரையும், ஹட்டன் நுவரெலியா பகுதிகளில் பெப்ரவரி முதல் மே வரையும் நடைபெறும்.

தோட்டங்களில் திருவிழா வெவ்வேறு நாட்களில் நடப்பதால் நாடக ரசிகர்கள் மூன்று நான்கு மைல்கள் நடந்து சென்று நாடகம் பார்ப்பார்கள்.

இந்தியாவிலிருந்தும் சில நாடகக் குழுவினர் இலங்கை வந்து நாடகங்களை நடத்தினர்.

கல்வளை என்ற தோட்டத்தில் ஜோன் கங்கானி என்ற சிங்களவரே, தமிழ் நாடக ஆசிரியராகத் திகழ்ந்தார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

1960களில் இந்த புராண நாடகங்கள் மறைந்து சமூக நாடகங்கள் அந்த இடத்தைப் பிடித்தன.

தோட்டங்கள் தோறும் சமூக நாடகங்கள் மேடையேறின.

“இரத்தக் கண்ணீர்”, “வேலைக்காரி” போன்ற நாடகங்களும் அரங்கேறின.

1966ல் கல்வளையில் நான் பாட்டாளி நாடக மன்றம் என்ற ஒன்றை ஆரம்பித்து கதை வசனம் எழுதி நானே நெறியாள்கையும் செய்து “விவேகத்தால் வந்த விவாகம்”; “பாட்டாளி துயர்” “குடியால் நல்ல குடும்பமும்” என்ற நாகடங்களை அரங்கேற்றினேன்.

ஆயினும் 1956, 1971, 1983 கலவரங்கள் மலையகக் கலைகளை சூறையாடிவிட்டன.

தப்பு கலை

———–

தப்பு மிகவும் இரசனையுள்ள ஒரு தோல் கருவி. முன்னர் எல்லா தோட்டங்களிலும் தப்பு கலை இருந்தது

தப்பு பல வகைப்படும்.

அவை : பிறட்டுத் தப்பு

காவடித் தப்பு

சாவுத் தப்பு

கரகத் தப்பு

ஒரு தோட்டத்தின் எல்லைக்கு சென்றால் இங்கு தப்பு சத்தம் கேட்டால் ஏதோ மரணம் நடந்திருக்கின்றது அல்லது கோவில் திருவிழா இல்லது காமன் கூத்து என்று உடனே புரிந்துக் கொள்ள முடியும்.

தப்பு இல்லாமல் காமன் கூத்து நடக்காது.

இன்று திருவிழாக் காலங்களில் கல்யாணம் போன்றவற்றில் மேளம், கிளாசிக் நெட் போன்றவற்றை பாவிக்கின்றார்கள்.

இது என்ன சத்தம் என்ன நிகழ்வு என்று தெரியாது.

ஆனால் தப்பு அப்படியல்ல. சத்தத்தை வைத்தே கண்டுப்பிடித்து விடலாம்.

தப்பு அடிப்பவர்கள் மரண வீடுகளில் வருபவரிடம் காசு வாங்குவார்கள். அப்படி தோட்ட உத்தியோகத்தரோ அல்லது இறந்தவரின் உறவினர்கள், வந்தவர்களின் உறவினர்களோ வந்தால் ஆறுமுகம் கணக்கப்பிள்ளை என்று சொல்லி அடிக்கும்படி தப்புக்கும் பெரியவர் சொல் அப்படியே அடிப்பார்கள்.

யாரையாவது புகழ்ந்துப்பாட அல்லது யாராவது காசு கொடுத்தால் அப்படி சொல்லி தப்பு அடிப்பார்கள்.

எழும்பிச்சை பழத்தை கண்ணுல பிழிஞ்சிகிட்டா எப்படி குளுகுளுனு இருக்கும்

பாக்குர பார்வை கருடப்பார்வை

நடக்குர நடை ராஜநடை

போடுவது ஒன்னு, நூறு, ஆயிரம் என்று தப்பு அடிப்பார்கள்.

அந்தக் காலத்தில் சில வீடுகளில் பெண் பிள்ளைகள் பருவம் அடைந்தால் கூட தப்பு அடித்து தண்ணீர் ஊற்றுவார்கள்.

இப்படி எல்லா வiகையிலும் ஆதிக்கம் செலுத்திய தப்பு இன்று அருகிவருகின்றது.

இந்த கலையை மீண்டும் புதுப்பிப்பது அவசியமான ஒன்றாகும்.

 

ஆர் கிருஸ்ணன்
பதுளை

கருத்து தெரிவிக்க