கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவானுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பின் புறநகர் வெல்லம்பிட்டி காவல்துறையின் பொறுப்பதிகாரி காமினி செனரத் ஹேவவர்த்தன இந்த முறைப்பாட்டை,நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் செய்துள்ளார்.
வெல்லம்பிட்டி செம்பு தொழிற்சாலையின் 9 பணியாளர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமையை ஆட்சேபித்து, கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகேவுக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு அன்று “சினமன் கிரான்ட்” விருந்தகத்தில் தாக்குதலை நடத்திய இன்ஷாப் அஹமட் என்பவர், வெல்லம்பிட்டி செம்பு தொழிற்சாலையை, குண்டுகள் தயாரிக்கும் இடமாக பயன்படுத்தி வந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பிலேயே அங்கு பணியாற்றிய 9 பணியாளர்கள்ஏப்ரல் 21ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
எனினும் போதுமான சாட்சியங்கள் இல்லை என்றுக்கூறி மே மாதம் 6ஆம் திகதியன்று அவர்களை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை சந்தேகத்துக்குரியவர்களுக்கு பிணை வழங்க தமது எதிர்ப்பை வெளியிட்டது.
இந்த 9 பேரையும் விடுவித்தால், அது பொதுமக்கள் மத்தியில் கலவர நிலையை ஏற்படுத்தும்.எனவே அவர்களை தடுக்கவைக்கவேண்டும் என்றும் காவல்துறை கோரியது.
எனினும் நீதிவான், தமது தனிப்பட்ட தீர்மானமாக அவர்களை பிணையில் அனுமதித்தார்.
இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வெல்லம்பிட்டி காவல்துறை பொறுப்பதிகாரி நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க