இந்தியா

சென்னை உள்பட 11 நகரங்களில் 5-வது கட்டமாகத் தொடருமா ஊரடங்கு..?

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து அதை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.


ஆனால் ஊடரங்கு அமலுக்கு வந்து 2 மாதம் கடந்துவிட்ட நிலையிலும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து நோய் பரவுதல் அதிகரித்து வருகிறது.

தற்போது 1 லட்சத்து 51 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 337 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் நோய் தாக்குதல் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 16 நாட்களில் இறப்பு விகிதம் 2 மடங்காகி இருக்கிறது.

பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து நோய் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

நிலைமை இப்படி இருப்பதால் ஊரடங்கை உடனடியாக வாபஸ்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 5-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து பிரதமர் அலுவலகம் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது.

5-வது முறை ஊரடங்கு நீட்டிக்கும்பட்சத்தில் பல்வேறு விதமான தளர்வுகளையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமாக மத்திய உள்துறை விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் பிரதமர் அலுவலகம் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் மட்டத்தில் வந்த தகவல்படி ஊரடங்கு இன்னும் 2 வார காலத்திற்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை தொடர்வதுடன் மேலும் வலுவான சில கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை 11 நகரங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள மொத்த நோயாளிகளில் 70 சதவீதம் பேர் இந்த 11 நகரங்களில் உள்ளனர்.

சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா போன்ற நகரங்களும் இதில் அடங்கும். 11 நகரங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதுடன் பல புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மற்ற இடங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக வழிபாட்டு தலங்கள் திறக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது சுகாதார முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே கொடுக்கும் வகையில் சட்டத்தை திரும்ப பெறுவதா? என்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கருத்து தெரிவிக்க