ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும், மலையக தமிழ் மக்கள் தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட வைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துடன் பேச்சு நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று (01) முற்பகல் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சு கேட்போர் கூடத்தில், கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் கூடியது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விவகாரங்கள் தொடர்பிலும், சஜித் பிரேமதாசவுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய உடன்பாடுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன், மலையகத்திலுள்ள வேறு கட்சிகள் சஜித்துக்கு ஆதரவை வழங்கினால் அதற்கு தடையாக இருக்கப்போவதில்லை எனவும் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
கூட்டணியின் பிரதித் தலைவர்களான பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார், அரவிந்த குமார், பொது செயலாளர் சந்திரா சாப்டர், பிரதி செயலாளர் சண் பிரபாகரன், அந்தனி லோரன்ஸ், கே.டி. குருசாமி, சிறிதரன், சரஸ்வதி சிவா, உதயகுமார், புத்திர சிகாமணி, அனுஷா சந்திரசேகரன், விஜயசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க