” ஜனாதிபதி தேர்தலில் இணைந்துசெயற்பட முன்வருமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியால் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரால் அனுப்பட்ட கடிதம் எனக்கு கிடைத்துள்ளது.
எனினும், ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கும் முடிவை நாம் எடுக்கவில்லை. அக்கட்சிக்கு எதிராக பலமானதொரு கூட்டணியை கட்டியெழுப்பும் நிலைப்பாட்டிலேயே இன்னும் இருந்துவருகின்றோம்.”
-இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகலையில் இன்று (29) நடைபெறும் சுதந்திரக்கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின்கீழ் நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தடுத்து நிறுத்தினார்.
அதுமட்டுமல்ல நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் நிராகரித்தார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் ஒரே நாளில் ஐந்து வர்த்தமானி அறிவித்தல்களைவிடுத்து மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார். ஆனால் மறுநாளே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து மஹிந்த அணியினர் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர்.
இதனால் அவர்களின் எம்.பி. பதவி சவாலுக்குட்படுத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் மஹிந்த அமரவீர அனுப்பிய கடிதத்தால்தான் தப்பினார்கள். இதனை மறந்துவிட்டு இன்று சிலர் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை மஹிந்த அணியினருக்கு பெறமுடியாமல்போனதற்கு ஜனாதிபதி பொறுப்பாக முடியாது. அதனை அவர்கள்தான் செய்திருக்க வேண்டும்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு இல்லாமல் எவராலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியாது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பலமானதொரு சக்தியை கட்டியெழுப்பும் நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். எனவே, எமது விட்டுக்கொடுப்புகளை பலவீனமாக கருத வேண்டும்.” என்றார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்து உரையாற்றினார்.
கருத்து தெரிவிக்க