உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மைத்திரியிடம் ஆதரவுகோரி தூதனுப்பினார் சஜித்!

ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக பல தரப்புகளினதும் ஆதரவைப்பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, சுதந்திரக் கட்சியுடனும் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்கான அழைப்பு கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஊடாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார் என்று தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் என கூறப்படுகின்றது.
இதற்கமைய தயாசிறி ஜயசேகரவுடன் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட பேச்சுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து இறுதிக்கட்ட பேச்சுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சஜித் பிரேமதாச தயாராகிவருகிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நேற்று (28) பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபகச் ஆகியோரும்  சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி தேர்தலை பொது  சின்னத்தில் எதிர்கொள்வதற்காக மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ராஜபக்சக்கள் ஏற்க மறுத்தனர். மொட்டு சின்னத்திலேயே கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவார் எனவும் எடுத்துரைத்தனர்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலை தாமரை மொட்டு சின்னத்திலும், நாடாளுமன்றத் தேர்தலை பொது சின்னத்திலும் எதிர்கொள்வதற்கான யோசனையையும் ராஜபக்சக்கள் முன்வைத்தனர். எனினும், மைத்திரி உடனடி பதில் எதனையும் வழங்கவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுதந்திரக்கட்சியின் ஆதரவை பெறும் முயற்சியில் சஜித் இறங்கியுள்ளார்.
சு.கவின் மத்தியசெயற்குழு நாளை திங்கட்கிழமை கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. இதன்போது சஜித்தால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பில் பரீசிலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சு.கவின் நிலைப்பாடு நாளை வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் வார இறுதியிலேயே அது சாத்தியமாகும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்து தெரிவிக்க