உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கவில்லை – தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

சம்பள முரன்பாட்டினை தீர்க்க கோரி நாடாளவிய ரீதியில் ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கவில்லை என தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்தார்.

அட்டனில் 26.09.2019 அன்று தன்னெழுச்சி இளைஞர் அமைப்பும், தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இரண்டு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை தவிர்த்து வழமைப்போல் நாங்கள் பாடசாலை நடவடிக்கையை மேற்கொள்கின்றோம்.

இதற்கான காரணம் நாங்கள் கடந்த ஆறாம் மாதம் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளருடன் கலந்துரையாடி ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற சம்பள முரண்பாடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடினோம்.

இந்த கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்பட்டது. அத்தோடு, இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த ஆசிரியர் சங்கங்கள் எங்களுக்கு எந்தவிதமான தெளிவையோ, கலந்துரையாடளுக்கோ அழைப்பு விடுக்கவில்லை.

இந்த போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த காலக்கட்டத்தில் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறுவதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாகவே நாங்கள் போராட்டத்தை தவிர்த்து வழமைப்போல் பாடசாலை நடவடிக்கையை மேற்கொண்டோம் என்றார்.

கருத்து தெரிவிக்க