ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கபப்படுகின்றது.
இதனடிப்படையில் உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் இருந்தும் இன்றும் நாளையும் விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மதிப்பீட்டுப் பணிகளிலிருந்து விலகியுள்ளமை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜீதவிடம் வினவியபோது, மதிப்பீட்டுப் பணிகளிலிருந்து விலகுவது தொடர்பில் ஆசிரியர்கள் இதுவரை அறிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வழமைபோன்று உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு இன்று (26) இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
சட்டத்துறைக்கு சம்பளத்தை அதிகரித்து அரச சேவையில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் H.A.L. உதயசிறி தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க