உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று  புதன் கிழமை 2 ஆவது நாளாகவும்; அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
குறித்த தடை உத்தரவை மீறி   ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் கடந்த திங்கட்கிழமை (23) தகனம் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது பொது மக்கள் மீதும் சட்டத்தரணிகள் மீதும் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவங்களை கண்டித்து மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை (25) 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்திற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்து தமது வாயை கருப்பு பட்டியினால் கட்டி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதோடு,தமது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் கட்டளையை உதாசீனம் செய்த ஞானசார தேரர் உற்பட சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களையும், கட்டளையை அமுல் படுத்த தவறிய பொலிஸ் அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள கூறி குறித்த பகிஸ்கரிப்பு இடம் பெற்றது.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு எதிர் வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என மன்னார் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளர்.
இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரனைகளுக்காக வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து திரும்பிச் சென்றுள்ளதோடு,இன்றைய தினம் இடம் பெற இருந்த வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க