ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நான்கு நீதியரசர்களைக் கொண்ட புதிய விசாரணைக் குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
இதுதொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குழுவுக்கு மேல்நீதிமன்ற நீதியரசர் ஜனக டி சில்வா தலைமை தாங்குகிறார்.
மேல்நீதிமன்ற நீதியரசர் நிசந்த பந்துல கருணாரத்ன, மேல்நீதிமன்ற முன்னாள் நீதியரசர்கள் நிகால் சுனில் ராஜபக்ச, பந்துல குமார அத்தபத்து ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்து இந்த குழு பக்கசார்பற்ற- முழுமையான விசாரணைகளை நடத்தும்.
குண்டுத் தாக்குதல்களுடன் நேரடியாக, மறைமுகமாக தொடர்புபட்டிருந்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளையும் இந்தக் குழு கண்டறியும்.
அத்துடன் இந்த தாக்குதலை தடுக்கவோ தீவிரவாத செயற்பாடுகளை கண்டறிந்து தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத, தமது கடமையை செய்யத் தவறிய அதிகாரிகளையும் கண்டறியுமாறும் இந்தக் குழுவிடம் கோரப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையையும், அடுத்த இரண்டு மாதங்களில் மேலதிக இடைக்கால அறிக்கைகளையும், இறுதி அறிக்கையை 6 மாதங்களிலும் சமர்ப்பிக்குமாறு இந்த விசாரணைக் குழு கோரப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க