” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பானது சீனாவை அவமதிக்கும் செயலாகும். எனவே, தவறை ஏற்று தனது உரை தொடர்பில் ஜனாதிபதி உரிய விளக்கத்தை வழங்க வேண்டும்.” – என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
தாமரைக் கோபுர கட்டுமானப் பணிக்காக இலங்கை அரசாங்கத்தினால் 2012 இல் சீன நிறுவனம் ஒன்றுக்கு முற்பணமாக செலுத்தப்பட்ட 200 கோடி ரூபா காணாமல் போயிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு போலியானது. மக்களை தவறாக வழிநடத்தகூடியது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ( Aerospace Long-March International Trade Co Ltd)
எலிட் நிறுவனம் 200 கோடி ரூபா அல்ல ஒரு சதம்கூட செலுத்தப்படவில்லை. எனவே, பயணம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.
அத்துடன், ஜனாதிபதி கூறுவதுபோல் எலிட் என்ற கம்பனி காணாமல்போகவில்லை. இது இன்னும் இயங்கிகொண்டுதான் இருக்கின்றது.
ராஜபக்சக்களுக்கு எதிராக போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தே மைத்திரிபால சிறிசேன அன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்வேளை மீண்டும் பழைய பல்லவியை பாட ஆரம்பித்துள்ளார்.
நாட்டின் அதேபோல் அரச தலைவர் நகைச்சுவையாளராக மாறக்கூடாது. ஆகவே, தனது பதவிகாலம் முடிவடையும் வரையில் நிதானமாக கருத்துகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஜனாதிபதியால் கூறப்பட்ட நிறுவனமானது சீன அரசுக்குரிய நிறுவனமாகும். எனவே, அவரின் அறிவிப்பானது அந்நாட்டை கொதிப்படைய வைக்கும் என்பதுடன் சீனாவைஅவமதிக்கும் செயலாகும்.
சீனாவே உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திவருகின்றது. இன்னும் சில வருடங்களில் முதல் இடத்தை பிடிக்கும். ஜப்பானைவிட இலங்கைக்கு கூடுதல் உதவிகளை வழங்கிவருகின்றது. ஆகவே, அந்நாட்டுடனான உறவு மிக முக்கியமாகும்.
குறிப்பாக ஓரமாக ஒதுங்கி செல்லும் பாம்பை தடியால் அடித்துவிட்டு அது தீண்ட வருகிறது என கூச்சலிடுவதில் பயன் இல்லை. பலம்பொருந்திய நாடுகளுடன் கொடுக்கல் – வாங்கல் செய்யும்போது இதைவிடவும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
எமது அரசாங்கமும் அமெரிக்காவுடன் மோதியது. ஆனால், தூரமாக சென்ற பாம்பை நாம் தடியால் அடிக்கவில்லை. எம்மை தீண்டவந்ததாலேயே எதிர்க்கவேண்டியேற்பட்டது.
எனவே, தன்னால் தவறு இழைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்று அது தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்கவேண்டும். சீனாவுடனான உறவை பலப்படுத்திக்கொள்ளவேண்டும்.” என்றார்.
கருத்து தெரிவிக்க