ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்குமாறு கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (16) எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாச.
அம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற வீடமைப்பு திட்டத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்குமாறு எமது கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
எனது பெயரை அறிவிப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுவையும், நாடாளுமன்றக் குழுவையும் கூட்டி ஏகமனதாக தீர்மானமொன்றை எடுக்குமாறு கோருகின்றேன். அவ்வாறு முடியாவிட்டால் இரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறு கோருகின்றேன்.
கடந்தகாலங்களில் எனக்காக வாய்ப்புகளை நான் விட்டுக்கொடுத்தேன். தற்போது எனக்கால காலம் உதயமாகியுள்ளது. எனவே, முன்வைத்த காலை பின்வைக்கமாட்டேன். ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.” என்றார்.
கருத்து தெரிவிக்க