உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தாயை கொலை செய்த மகன் விளக்கமறியலில்- ஹட்டனில் சம்பவம் !

ஹட்டன் – விக்டன் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட 81 வயதுடைய பெண்ணின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, அட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ பொன்சேகா முன்னிலையில் குறித்த பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை (13.09.2019) மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பம் தொடர்பாக தெரியவருவதாவது,

நோய்வாய்ப்பட்டிருந்த 81 வயதுடைய தாய், கடந்த 9ஆம் திகதி வீட்டில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து, அவரது மகனும் உயிரிழந்த பெண்ணின் 13 வயதுடைய பேரப்பிள்ளையும்  முச்சக்கரவண்டி ஒன்றில், சடலத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், அவர்கள் சென்ற பின்னர், அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென, உயிரிழந்த பெண்ணின் மருமகள், வட்டவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், இத்தாயின் சடலத்தைக் கண்டுபிடிப்பதற்காக, ஹட்டன் பொலிஸ் நிலைய மோப்ப நாயின் உதவியுடன், விக்டன் தோட்ட மக்களும் இணைந்து, வியாழக்கிழமை (12.09.2019) தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று, தோட்ட மக்கள் சந்தேகப்பட்டதையடுத்து, இது தொடர்பாகஇ பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில்,  தனது தாய், தந்தை, சகோதரன் ஆகியோர் இணைந்து தனது பாட்டியை, தடியால் தாக்கி, கதிரையில் கட்டி வைத்த பின்னர், பையொன்றில் கட்டி, பாட்டியைக் கொண்டு சென்று விட்டதாக  8 வயது இளைய பேரன்  வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக சிறுவனின் தாயான உயிரிழந்த பெண்ணின் மருமகள் வட்டவளை பொலிஸரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அத்துடன், கொழும்புக்கு தப்பிச் சென்ற நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் மூத்த பேரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, வீட்டுக்கு பின்புறத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் தாயின் சடலத்தை போட்டு மூடியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்ற வட்டவளை பொலிஸார், 81 வயதான பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக மேற்கொள்ள டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க