ஜோதிடம்

குரு பார்வை! –II

தமிழகத்திலிருந்து குணா

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்ற ஜோதிடப் பழமொழியில் வாழ்வின் பல விஷயங்கள் உள்ளடங்கி உள்ளன. ஒரு மனிதன் பிறந்து வளரும்
காலத்தில்தான் படிப்பு பருவம் குறுக்கிடுகிறது. படிக்கும் பருவத்தை முறையாக பக்குவத்துடன் கடந்தவர்கள் எத்தனை பேர், பக்குவமின்றி
தவறவிட்டவர்கள் எத்தனை பேர் என்று ஆராய்ந்தாலேபோதும் எவருக்கும் குருபலம் உண்டு என்பதை கணித்து விடலாம்.’

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ‘குரு குலங்கள்’ இருந்தன. குரு குலத்தில் குருபக்தியே. அதாவது ஆசிரிய பக்தியே பிரதானமாய் இருந்தது. அறிவுடன்
பண்பும் பக்குவமும் சேர்ந்தே கல்வி கற்பிக் கப்பட்டது. அதுவே அன்றைய சமூகம் மேன்மையுடன் சிறப்பாய் திகழ்ந்தற்கு காரணமாய் அமைந்தது!.
இன்றோ குரு பக்தியும், மாணவர் மாண்பும் கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் மாறி விட்டது. வாழ்வுக்கு தேவைப்படும் அறிவும்கூட
வியாபாரமாக விற்கும் விலை பொருளாக மலிந்து விட்டது.

இத்தகைய சூழலிலும் கூட படிக்கும் காலத்தில் ஆசிரியர்களை மதிக்கும் சுபாவமுள்ள மாணவர்கள் சுமாரான அறிவுள்ளவர்களாக இருந்தால்கூட படிப்பை
முறையாக முடித்து வாழ்வை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள். ஆனால் ஆசிரியர்களை மதியாது, ஆவணப் போக்கால் அவர்களை அலட்சியமும்,
அவமரியாதையும் செய்யும் மாணவர்கள் அறிவில் பிரகாசமானவர்களாக இருந்தாலும்கூட படிப்பில் தவறி வாழ்விலும் அவதிப்படுவதை நாம் இப்போதும்
பார்க்கிறோம். ஆக ‘குரு பலம்’ என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றுதான்! படிப்புதான் என்றில்லை. நாம் எதைப் பற்றி எவரிடம் கற்கிறோமோ
அந்த விஷயத்துக்கு அவரே குரு!

நவகிரக குருவின் மூலப் பெயர் பிரகஸ்பதி. இப்பெயருக்கு ‘யோசனை தெரிவிப்பவர்’ என்று பொருள். வாழ்வில் நமக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்க்க
எவ்வித இலாபமும் இன்றி நமக்கு சரியான யோசனைகளை சொல்லி வழிகாட்டுபவர்கள் கூட குருவுக்கு நிகரானவர்களே!
நம்மை சுற்றியிருப்பவர்கள் நமக்கு வழி காட்டுபவர்கள். நமக்கு நன்மை மட்டுமே நல்கும் குணமுடையவர்கள் நம்மோடு வாழ்வில் பயணிப்பவர்கள்
அனைவருமே நவகிரக குருவின் அருள் உடையவர்களாக இருந்தால் வாழ்வில் நாம் போகும் திசையெங்கும் வெற்றியே!

அப்படிப்பட்ட தனித்தன்மை உடையதாய் குரு இருப்பதற்கு என்ன காரணம்? காரணம் மிக எளிது! செவ்வாய் கிரகம் தொழில் மற்றும் உத்தியோகத்துக்கு அதிபதி. அவர் நீச்சமடைந்து பலவீனப்பட்டால் வேலைக்கு ஏது உத்திரவாதம்? சனி பகவான் நிண்ட ஆயுளுக்கு அதிபதி. அவர் நீச்சம் பெற்று பலமிழந்தால் நீண்ட ஆயுளுக்கு ஏது உத்திரவாதம்? சுக்கிரன் திருமண வாழ்வுக்கு உரியவர். அவர் நீச்சமாயிருந்தால் இல்லற சந்தோஷத்திற்கு ஏது உத்தரவாதம்
அதேபோல் ‘குரு பகவான்’ நமக்கு வாழ்வில் கிடைக்கும் தெய்வ கடாட்சத்துக்கு உத்தரவாதம்!

அப்படியான குரு நீச்சம் பெற்றால் நமக்கு தெய்வ கடாட்சம் ஏது? ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று ‘என்று சொல்வோமே, அந்த குழந்தை பாக்கியத்தை அவளும் விஷயத்தை செய்வதும்கூட அவரது பணியே!

தெய்வ கடாட்சம்..! எது செய்­தாலும் எதை செய்தாலும் என்ன செய்தாலும் எப்படி செய்தாலும் நிம்மதியான வாழ்வு அமைய இறைவனின் அனுகிரகம் வேண்டும். குறுக்கு வழியில் வெற்றி பெற்று வாழ்வை ஆபத்துக்கு மத்தியில் கொண்டு நிறுத்துவதும் நிம்மதியில்லாமல் வாழ்வதுதான் இன்றைய
கலியுகமாய் இருக்கிறது. ஆனால் நேர் வழியில் வெற்றி பெற்று அதை அப்படியே தக்கவைப்பது இறையருளே!

அப்படிப்பட்ட தெய்வ கடாட்சத்துக்கு குரு பகவனின் துணை இன்றியமையாதது. கடவுள் வழிபாட்டை நிந்திப்பவர்கள், நாத்திகப்போக்கினை பிறர்மீது வலிய
திணிப்பவர்கள் மற்றும் குழந்தையின்றி தவிப்பவர்கள் ஜாதக கட்டங்களில் குரு மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பலமின்றி இருப்பார். அதே நேரம் ஞானிகள், மேதைகள், தத்துவதாதிகள், தலைமை பொறுப்பு ஏற்பவர்கள் மற்றும் ஆசாரத்துடன் வாழ்வை நகர்த்தும் ஒழுக்க சீலர்கள் ஜாதகங்களில் குரு
மிகுந்த பலத்துடன் விளங்குவது ஜோதிடத்தில் கண்கூடு!

அதனால்தான் நவகிரகங்களில் ‘குரு பகவானை’ இராஜகிரகமாக சிறப்பிக்கிறது ஜோதிடம். குரு நான்கு வேதங்களையும், அறுபத்தி நான்கு கலைகளையும் அறிந்தவர் என்று புராணங்களும் கூறுகின்றன.

நவகிரகங்களில் சுபகிரகங்கள் மூன்று. சந்திரன் வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் அசுபராகவும் கருதப்படுவதால் இந்த எண்ணிக்கையில் அவரை நான் சேர்க்கவில்லை. மற்றவை முறையே குரு, சுக்கிரன், புதன் என்று மூவராவர்.

இதில் புதனை ‘கால் சுபர்’ என்றும் சுக்கிரனை ‘அரை சுபர்’ என்றும் அளவிட்ட ஜோதிடம் ‘குரு பகவானுக்கு மட்டும் ‘முழு சுபர்’ என்ற அங்கீகாரத்தை கொடுத்த்தில் இருந்தே குருவின் சிறப்பை நாம் புரிந்து கொள்ள முடியும்!

இப்படி சிறப்பு பெற்ற சுப குருவின் பார்வையில் கோடி நன்மைகள் விளைவதில் ஆச்சரியத்துக்கு இடமேது! ஆனால் இந்த முழு சுபரான குருவும் ஒருசில லக்னங் களும் ஆகாதவராகவும் இன்றும் ஒரு சிலருக்கு மரணத்துக்கு ஒப்பான தோஷங்களை தரும் ‘மாராகாதிபதி’ யாகவும் மாறிவிடுகிறார்!

அதுவும் லக்னத்திலோ ஜென்ம ராசியில் குரு வரும்போதோ ஜாதகர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். அது ஏன் என்பதை அடுத்த இதழில் காண்போம்.

கருத்து தெரிவிக்க