2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரும் பத்மபூஷன் விருத்துக்கு பிவி சிந்து பெயரும் மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அதற்கு அடுத்தப்படியாக பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் விளையாட்டு வீராங்கனை ஆவார்.
மேரிகோம் ஏற்கனவே பத்மபூஷன் விருதை 2013-ம் ஆண்டும், பத்மஸ்ரீ விருதை 2006-ம் ஆண்டும் பெற்று இருந்தார்.
பத்மவிபூஷன் விருதை பெற இருக்கும் 4-வது விளையாட்டு நபர் என்ற பெருமையை மேரிகோம் பெறுவார்.
2007-ம் ஆண்டு செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தும், 2008-ம் ஆண்டு கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கரும், மலையேறும் வீரர் எட்மண்டு ஹிலாரியும் (நியூசிலாந்து) பத்மவிபூஷன் விருதை பெற்றிருந்தனர்.
36 வயதான மேரிகோம் 6 முறை உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலபதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு மேரிகோமை பாராளுமன்ற மேல்சபைக்கு நியமன எம்.பி.யாக பா.ஜனதா அரசு நியமித்தது.
உலக பேட்மிண்டன் போட்டியில் சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்த பி.வி.சிந்து பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இது நாட்டில் வழங்கப்படும் 3-வது உயரிய விருது ஆகும்.
2017-ம் ஆண்டு அவர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் இறுதிப்பட்டியலில் அவர் இடம்பெற முடியாமல் போனது. 2015-ம் ஆண்டு பி.வி.சிந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு வினிஷ்போகத் (மல்யுத்தம்), ஹர்மன்பிரீத் கவூர் (கிரிக்கெட்) ரணிராம்பால் (ஆக்கி), சுமாஷிரு (துப்பாக்கி சுடுதல்), மணிக்கா பத்ரா (டேபிள் டென்னிஸ்), தஷி மற்றும் நுங்ஷி மாலிக் (மலையேறுதல்) ஆகிய 7 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய விளையாட்டு அமைச்சகம் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 9 பேரும் வீராங்கனைகள் ஆவார்.
பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதி பெயர் விவரங்களை ஜனவரி 25-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும்.
கருத்து தெரிவிக்க