கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டில், இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து, கோட்டா தரப்புக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல்வாதி அல்லாத துறை சார் வல்லுனர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
அதனை அடிப்படையாக கொண்டே வியத்மக என்ற துறைசார் வல்லுனர்களின் அமைப்பை உருவாக்கி பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தார்.
இந்த அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 2500 துறைசார் வல்லுனர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று ஷங்ரி லா விடுதியில் நடத்தப்பட்டது.
கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் வெற்றியை அடிப்படையாக வைத்தே இந்த மாநாடு கூட்டப்பட்டது.
இதில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உரையாற்றிய போது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரே நாட்டை ஆள வேண்டும் என்றும், வர்த்தகரோ விளையாட்டு வீரரோ ஏனைய துறைசார் வல்லுனர்களாலோ அதனை சாதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இது கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நிலைப்பாட்டுக்கும், எதிர்பார்ப்புக்கும் எதிரான கருத்தாக பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க