கொரோனா தொற்று நோய் பரவத் தொடங்கியதில் இருந்து உலக அளவில் ஆறில் ஒருவர் வேலையின்றி இருப்பதாகவும், அதேநேரத்தில் பணியில் இருப்போர் 23 சதவீதம் குறைவாக வேலை செய்கின்றனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தொற்று நோய் பரவலால் இளைஞர்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி மாதம் முதல் இளைஞர்களுக்கான வேலையின்மை கணிசமான அளவில் ஆரம்பித்து தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. அத்துடன் இளைஞர்களை விட இளம் பெண்களையே அதிகமாக பாதித்துள்ளது என தெரிவித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் கய் ரைடர், 2019 இல் இளைஞர்களின் வேலையின்மையின் விகிதம் 13.6 சதவீதமாக இருந்தது. உலக அளவில் கல்வியறிவிலோ பயிற்சியிலோ ஈடுபடாத 267 இலட்சம் இளைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் நிலையை மேம்படுத்துவதற்கு உரிய உடனடி நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளாமல் ஒதுக்கப்படும் போது அது எதிர்காலத்தையே சேதப்படுத்தும். அத்துடன் கொரோனாவுக்கு பின்னரான பொருளாதாரத்தை திறம்பட உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் வளர்ந்த நாடுகளில் விரிவுபடுத்தப்பட்ட நிலையிலான வேலை வாய்ப்புகள், பயிற்சி உத்தரவாத திட்டங்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருமான பொருளாதார பிரிவுகளில் வேலை வாய்ப்பு தரும் முக்கிய திட்டங்கள் அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்.
கருத்து தெரிவிக்க