வெளிநாட்டு செய்திகள்

‘காஷ்மீர் விவகாரம் பாதுகாப்புக்கு சவால்’ – இம்ரான்கான்

கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நாளை நினைவுகொள்ளும்வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் திகதியை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினமாக பாகிஸ்தான் அனுசரிக்கிறது.

இதையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் தொண்டை நரம்பு ஆகும். அதன் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக அமைந்துள்ளது. ஆகவே, இதுகுறித்து உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக, உலக தலைநகரங்களிலும், ஐ.நா.விலும் ஆக்கப்பூர்வமான ஜனநாயக பிரசாரத்தை பாகிஸ்தான் தொடங்கி இருக்கிறது.

மேலும், இந்தியாவின் அணு ஆயுதங்கள் கையாளப்படுவது குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு உலக நாடுகளை பாகிஸ்தான் வற்புறுத்தி வருகிறது.

இந்த அணு ஆயுதங்கள், தெற்கு ஆசிய பிராந்தியத்துக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே, இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தாவிட்டால், அதனால் ஏற்படும் பேரழிவுகளுக்கு உலக நாடுகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும்.

பாகிஸ்தான், போரை விரும்பவில்லை என்று உலக நாடுகளிடம் சொல்லி இருக்கிறேன். அதே சமயத்தில், பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் சவால்களை பாகிஸ்தான் மவுனமாக வேடிக்கை பார்க்க முடியாது.” என்றும் அவர கூறினார்.

 

கருத்து தெரிவிக்க