ஜோதிடம்

அர்த்தாஷ்டம சனி ஆனந்தம் தருமா? -3

(தமிழகத்தில் இருந்து குணா)

அஷ்டமத்தில் வரும் சனி கொடியவரா? ஏன்பதை ஆராய்வதற்கு முன்னர் அர்த்தாஷடம சனியைப்; பற்றி தெரிந்துக்கொள்வோம்.

இது மட்டும் என்ன ஆனந்தத்தை அள்ளித்தரப்போகிறதா? என்று நீங்கள் முணுமுணுப்பது என் செவிகளில் விழுகிறது.

உங்கள் முணுமுணுப்பிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

உண்மையில் ஏழரை சனிக்கும் அர்த்தாஷ்டம சனிக்கும் இடையில் கண்ணுக்கு புலப்படாத, வெளிப்படையாக தெரியாத… உள்ளீடான ஒரு தொடர்பு இருக்கிறது.

இராசிக்கு 12, 1,2 இல் சனி வருவது ஏழரை சனி. இராசிக்கு 4இல் சனி வருவது அர்த்தாஷ்டம சனி.

இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு மூன்றாம் இடம் இருக்கிறதே. அதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.

ஏழரை முடிந்ததும் மூன்றாம் இடத்தில் வந்து அமர்ந்துவிட்டுத்தான் நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக சனிபகவான் அமர்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஏழரை சனியோ நம்மை துன்பங்களில் துவைத்தெடுத்து, வாழ்க்கை பாடங்களை கற்பித்து பக்குவப்படுத்துகிறது.

ஆனால் மூன்றாம் இட சனியோ நமக்கு இராஜயோகங்களை வழங்கும் வள்ளல்.

இப்படி 3ஆம் இடத்தில், அளவின்றி இராஜயோகங்களை அள்ளி வழங்குவதில் உள்ள பின்னணியோ வெகு சூட்சமமானது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லவேண்டுமானால், சனி பகவான் நம் மனதுக்கு வைக்கும் பரீட்சையே இந்த 3ஆம் இடம்.

மனித மனதை விட பச்சோந்திதனம் படைத்த ஒரு விஷயத்தை நாம், வாழ்வில் பார்த்துவிடமுடியாது.

அதனால் தான் மனதை, ஒரு நிலையில்லாமல் குதியாட்டம் போடும்,குரங்குக்கு ஒப்பாக நமது முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.

சரி, மனதுக்கும் ஏழரை சனிக்கும் அர்த்தாஷ்டம சனிக்கும் என்ன சம்பந்தம் என்பதை விரிவாக பார்ப்போம்.

வாழ்வில் தொடர்ந்து சோதனைகளும் துன்பங்களும் வரும்போது நாம் நிறையக் கற்றுக்கொள்கிறோம்.

“எத்தனை திறமையிருந்தாலும் வெற்றி பெறுவதற்கு காலத்தின் உதவிவேண்டும்”

தன்னம்பிக்கைக்கும் ஆவணத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல், எவரும் வெற்றியை நீண்டகாலம் தக்கவைக்க முடியாது.

எதுவும் நம் கைகளில் இல்லை என்ற பேருண்மையை எவர் தன்னடக்கத்துடன் ஏற்கிறாரோ,அவரை வாழ்வில் நிரந்தர வெற்றியை பெறுகிறார் என்பதெல்லாம் நமக்கு ஏழரையில் துன்பங்களுக்கு மத்தியில் எமக்கு கிடைத்த பாடங்கள்.

ஆனால் மூன்றில் வரும் சனியால், மாற்றம், ஏற்றம், செல்வசெழிப்பு, திரும்பும் திசையெல்லாம் வெற்றி என்ற நிலை ஏற்படுவதால், நம் மனங்குரங்கு குடித்தவனை போன்று கர்வம் கொள்கிறது.

“நான்” “நான்” என்ற அகந்தையில் ஆட்டம்போட ஆரம்பிக்கும், மனப்பிசாசின் பிடியில் நாம் சிக்கிக்கொள்கிறோம்.

நம் மனப்பிசாசு தயாரித்துக்கொடுக்கும் மகுடத்தையும், தரித்து ஏந்தி, மமதையுடன் திரிகிறோம்…..ஏழரையில் கற்ற பாடங்களை மறந்து…

காலம் சுழன்று கொண்டேயல்லவா இருக்கிறது. நான்காம் இட சனியாக அர்த்தாஷ்டம சனியும் வருகிறது.

இதனை நாம் இப்படி பிரிக்கலாம். ஏழரை சனியில் இருப்பது நாம் வகுப்பில் படிப்பதை போன்றது…

மூன்றாம் இட சனி நடப்பது, நமக்கு நடக்க இருக்கும் தேர்வுக்கான படிப்பு விடுமுறை.

நான்காம் இடமான அர்த்தாஷ்டம சனியோ நாம் எழுதும் பொதுப்பரீட்சையை போன்றது.

வகுப்பில் படித்ததை தேர்வு படிப்பு விடுமுறையில் அலட்சியப்படுத்தினால், தேர்வில் வெற்றிக்காண இயலுமா?

இப்படித்தான், ஏழரையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை 3ஆம் இட சனி நடக்கும்போது தவறவிடுகிறோம். தொடர்ந்து வரும் அர்த்தாஷ்டம சனியால் அடிவாங்குகிறோம்.

நான்காம் இட சனியான அர்த்தாஷ்டம சனியில் “நான்” என்ற அகங்காரத்தினால், கெட்டப்பெயரை சம்பாதித்தல், தொழிலில் தோல்வி, பண்பில் குறைபாடு, தாய் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல், தவறான முடிவுகளால் சமூக அந்தஸ்து பாதிக்கப்படுதல், போன்ற பலன்கள், ஏழரையில் நடந்தது போன்றே, நடந்தேறும்.

இப்போது புரிகிறதா ஏழரை சனிக்கும் அர்த்தாஷ்டம சனிக்கும் இடையிலான மறைமுகத்தொடர்பு?

இதெல்லாம் சரி, அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தை நாம் தவிர்க்கமுடியுமா?  என்றால் முடியும்.

அது எப்படி என்பதையும், அஷ்டம சனியென்பது, நம் கற்பனைக்கு எட்டாத பலன்களை ஏன் உண்டு பண்ணுகிறது என்பதையும் அடுத்த வாரம் பார்ப்போம்.

கருத்து தெரிவிக்க