மக்கள் பாதுகாப்பிற்காக ஜனாதிபதி பொறுப்புக் கூறவேண்டும் ஆனால் அவ்வாறு நமது நாட்டில் இடம்பெறுவதில்லை என தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான செயற்குழுவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் வியாழக்கிழமை 29.08.2019 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன, திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ன திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம், உட்பட மட்டக்களப்பு மாவட்ட சமாதானப் பேரவை உறுப்பினர்களும், சமயத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 19வது அரசியல் திருத்தம் நாட்டிற்குச் சாபமா என்ற தொனிப்பொருளில் தெளிவுபடுத்திய தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன தொடர்ந்து கூறியதாவது,
70 (1) யாப்பின்படி ஜனாதிபதி ஏற்கனவே விடுத்த அறிவித்தலின்படி நாடாளுமன்றத்தை கூட்டுதல், நாடாளுமன்றத்தின் அமர்வை முடித்து வைத்தல் மற்றும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் உள்ளது.
மேலும் நாடாளுமன்றத்தின் ஆரம்ப கூட்டத்திற்கு தலைமை வகிப்பதோடு, அமர்வு ஆரம்பத்தில் கொள்கையை பிரகடனப்படுத்துவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
பிரதமர் உள்ளடங்கலாக அமைச்சரவையை நியமிக்கலாம். 30(1) யாப்பின்படி ஜனாதிக்கு அமைச்சரவை கூட்டத்தில் தலைமை வகிக்க இயலுமானதோடு ஜனாதிபதி ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமாவார்.
33(இ) யாப்பின்படி சமாதானத்தையும் மற்றும் யுத்தத்தை பிரகடனப்படுத்தும் அதிகாரம் இருப்பது ஜனாதிபதிக்காகும்.
இருந்தும் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறுவதில்லை. மக்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் தீர்மானங்களில் கூட அவர் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறுவதில்லை.
19வது திருத்தச் சட்டத்தின்படி 33(அ) யாப்பின்படி மக்கள் பாதுகாப்பிற்காக தற்காலத்தில் நடைமுறையிலுள்ள சட்டம் உள்ளடங்கலாக ஏதாவதொரு எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் தனது அதிகாரம், கடமைகள் மற்றும் நடவடிக்கைக்காக நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி 2018 ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்குள் யாப்பை மீறல் மற்றும் அரச துரோக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
உயர் நீதிமன்றத்தால் 2018 டிசம்பர் மாதம் 13ம் திகதி பெற்றுக்கொடுத்த வழக்கு தீர்ப்பின்படி உறுதியாவது ஜனாதிபதி யாப்பை மீறியுள்ளாரென்பதாகும்.
இருந்தும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு முன்மொழியப்படுவதை காணக்கூடியதாக இல்லை.
அதற்கான ஏதுவாக இருப்பது அதற்காக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற தற்போதைய அரசாங்கத்தால் இயலாததாலாகும்.
இது நாங்கள் அனைவரும் முகங்கொடுக்கும் யதார்த்தமாகும்.” என்றார்.
கருத்து தெரிவிக்க