இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 431 ஓட்டங்களை பெற்றிருந்த போது, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.
தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, போட்டியை சமநிலைப்படுத்தும் நோக்கில் விளையாடியது.
எனினும், இலங்கை கிரிக்கெட் அணி, 122 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதன்மூலம், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், ஆசிய நாடு அல்லாத நாடடொன்று இலங்கை மண்ணில், நான்காவது முறையாக இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக நியூஸிலாந்து அணி சார்பில், டொம் லதம் தெரிவுசெய்யப்பட்டார்.
லதம் இறுதியாக விளையாடிய தனது 8 இன்னிங்சுகளில் 4 தடவைகள் 150 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க