உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

”இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசினோம். எங்களை புதுடெல்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தார். விரைவில் அந்த பயணத்தை மேற்கொள்வோம் என நம்புகிறோம்.

தேசிய பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்குமாறு, புதுடெல்லியிடம் வலியுறுத்துவோம்.

தேசிய பிரச்சினைக்கு இலங்கை இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து நாங்கள் புதுடெல்லியுடன் கலந்துரையாடுவோம்.

இந்த விடயம் தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கும், ஏனைய நாடுகளுக்கும், பேச்சுகளுக்கு உதவிய நாடுகளுக்கும், இலங்கை அரசாங்கத்தினால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இப்போதைய சூழலில், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் உணர வைக்க வேண்டியது அவசியம்” என்றும் அவர் கூறினார்.

அடுத்து வரும் வாரங்களில் தமது பிரதிநிதிகள் குழுவை புதுடெல்லிக்கு அனுப்புவதற்கு கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது.

கருத்து தெரிவிக்க